உலகளாவிய அளவில் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளை எளிமையாக்கும் நோக்கில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது பிரீமியம் ‘Gemini AI’ திட்டங்களை ஒரு வருடத்திற்கு முழுமையாக இலவசமாக வழங்கிட அதிரடியாக அறிவித்துள்ளது.
புதிய கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் படிப்பு, குறிப்புகள் தயாரிப்பு, பாடங்களை ஆய்வு செய்தல் மற்றும் மாதிரித் தேர்வுகளை எழுதுதல் போன்ற பணிகளைத் தூரிதப்படுத்த கூகுள் இந்த முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. இதன் கீழ், தகுதியுள்ள கல்லூரி மாணவர்கள் 12 மாத காலத்திற்கு கூகுளின் அட்வான்ஸ்டு AI சேவைகளைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:
அமெரிக்காவிற்கு வெளியே இந்திய உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு ‘Google AI Plus’ திட்டம் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் வழக்கமாக மாதம் ₹399 (ஆண்டிற்குச் சுமார் ₹4,788) கட்டணத்தில் கிடைக்கும் இத்திட்டம், மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 2 மடங்கு கூடுதல் பயன்பாட்டு வரம்புகள் (2x usage limits), Gemini Omni மாடலுக்கான அணுகல், 400 GB கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜிமெயில், கூகுள் டாக்ஸ் போன்ற செயலிகளில் AI வசதிகள் நேரடியாகக் கிடைக்கப் பெறுகின்றன.
மாணவர்களுக்கான சிறப்பு ஸ்டடி ஹப் (Student Hub):
இத்துடன் மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக ‘Gemini Student Hub’ எனும் புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்கள் மற்றும் வகுப்பறை குறிப்புகளைப் பதிவேற்றி, அவற்றை எளிய பாடக் குறிப்புகளாகவும் (Study Notebooks), நினைவாற்றலை அதிகரிக்கும் பிளாஷ் கார்டுகளாகவும் (Flashcards), மாதிரி வினாடி வினாக்களாகவும் நொடியில் மாற்றிக் கொள்ள முடியும்.
சலுகையைப் பெறுவது எப்படி?
தகுதியுள்ள மாணவர்கள் Gemini for Students Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களது கல்லூரி/பல்கலைக்கழக கணக்கு அல்லது தகுதியான சான்றுகளைப் பயன்படுத்தி இச்சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். 2026 டிசம்பர் 31 வரை இச்சலுகையைக் கோர கூகுள் வாய்ப்பளித்துள்ளது. கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பு, செயற்கை நுண்ணறிவைத் தங்கள் கல்வியில் திறம்படப் பயன்படுத்த விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





