மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்டப் பொதுத்தேர்வு தேதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தத் தேர்வுகள் வரும் மே மாதம் 15-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டப் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்டத் தேர்வு குறித்த முக்கியத் தகவல் என்னவென்றால், மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே எழுதிய பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் மட்டும் மதிப்பெண்களை உயர்த்த (Improvement) இந்தத் தேர்வை எழுதலாம். அதாவது, முதல் சுற்றில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் எழுதி, அதன் மூலம் தங்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தை மாணவர்கள் அதிகரித்துக்கொள்ள முடியும்.
வெளியான கால அட்டவணையின்படி, முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் பின்வருமாறு நடைபெறுகின்றன:
-
மே 15: கணிதம் (Standard & Basic)
-
மே 16: ஆங்கிலம்
-
மே 18: அறிவியல்
-
மே 19: மொழிக் பாடங்கள் (இந்தி மற்றும் இதர வட்டார மொழிகள்)
-
மே 20: தகவல் தொழில்நுட்பம் (IT), செயற்கை நுண்ணறிவு (AI), சமஸ்கிருதம்
-
மே 21: சமூக அறிவியல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தத் தேர்வில் பங்கேற்க ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத (Failed) மாணவர்கள் இந்த இரண்டாம் கட்டத் தேர்வை எழுத முடியாது. இது முழுக்க முழுக்க மதிப்பெண்களை உயர்த்துவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள சிறப்புத் தேர்வு என்பதால், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உயர் கல்வியில் அவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கவும் இந்த இரண்டு கட்டத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே 15 முதல் 21 வரை நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் சிபிஎஸ்இ இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.