“நீட் தேர்வு ரத்து!” வினாத்தாள் கசிவு புகாரால் தேசிய தேர்வு முகமை அதிரடி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – 23 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு புகார்:

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வு நடைபெற்ற சமயத்திலிருந்தே வினாத்தாள் கசிந்ததாகப் பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. தொடக்கத்தில் இதனை மறுத்து வந்த தேசிய தேர்வு முகமை, தற்போது விரிவான விசாரணைக்குப் பின் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு:

இந்த முறைகேடு குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. “வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் குறித்து சிபிஐ முழுமையாக விசாரிக்கும். இந்த விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும், முழு ஒத்துழைப்பையும் தேசிய தேர்வு முகமை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வு எப்போது?

ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேர்வு தேதி மற்றும் அனுமதிச் சீட்டு (Admit Card) தொடர்பான தகவல்கள் வரும் நாட்களில் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  [ராணுவ ஹெலிகாப்டரில் வினாத்தாள்]: லீக் ஆகாமல் தடுக்க வரலாறு காணாத பாதுகாப்பு! நெல்லைக்கு பறந்து வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்! வங்கிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல்!

லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் மற்றும் மருத்துவக் கல்வியின் நம்பகத்தன்மையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, கல்வித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.