“மொபைல் ரீசார்ஜில் அதிரடி மாற்றம்!”: இனி 28 நாட்கள் இல்லை, 30 நாட்கள் வேலிடிட்டி – டிராய் போட்ட உத்தரவு!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நாட்டின் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் மாதந்திரத் திட்டங்களுக்கு மாற்றாக, முழுமையாக 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், மொபைல் பயனர்கள் இதுவரை ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்து வந்த நிலை மாறி, இனி ஆண்டிற்கு 12 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதுமானது. இது வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்டர்நெட் பயன்பாடு தேவைப்படாத அடிப்படை போன் பயனர்களுக்காக, டேட்டா வசதி இல்லாமல் குரல் அழைப்புகள் (Voice Calls) மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவை மட்டும் வழங்கும் பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டும் என டிராய் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.