“விஜய்யிடம் ஆதரவு கேட்டோம்… அப்புறம் திருமாவளவன்!”: மதுராந்தகத்தில் உண்மையை உடைத்த டிடிவி தினகரன்!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் மற்றும் ஆட்சி அமைப்பது தொடர்பான திரைமறைவு நகர்வுகள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் பேசிய கருத்துகள் தற்போது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நடந்து முடிந்த தேர்தலில் 107 தொகுதிகள் மட்டுமே கைவசம் உள்ளதால், முதலமைச்சர் விஜய்யால் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை நிலவியது. எனவே, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆதரவைப் பெற்று கூட்டணி கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை (EPS) முதலமைச்சராக்க நாங்கள் தீவிர முயற்சி செய்தோம்” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியாகும் தகவல்களை முற்றிலுமாக மறுத்தார். “அதிமுக ஆட்சி அமைக்க வேண்டுமானால், இன்றைய முதல்வர் விஜய்யிடம் தான் ஆதரவு கேட்க முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் இணைந்து அடுத்தகட்ட முயற்சியை மேற்கொண்டோம்” என்று டிடிவி தினகரன் விளாக்கினார்.

மேலும் இந்த அரசியல் நகர்வுகளின் பின்னணியில் எந்தவொரு வெளி சக்தியும் இல்லை எனத் தெளிவுபடுத்திய அவர், “இந்த முயற்சிகளில் திமுகவோ அல்லது பாஜகவோ பின்னணியில் கிடையாது. இது முழுக்க முழுக்க நாங்கள் எடுத்த அரசியல் சார்ந்த முடிவுகள் தான்” என்று கூறினார். மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் அளித்த இந்த ஓபன் பேட்டி, தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த அரசியல் பேச்சுவார்த்தைகளின் நிஜமான பிம்பத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.