வெளிநாடுகளில் வேலை தேடும் லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு ஒரு புதிய ‘Jobseeker Visa’ திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாக வளைகுடா நாடுகளில் பணிபுரிய அந்நாட்டைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனம் அல்லது நபர் ஒருவர் ஸ்பான்சராக (Sponsor) இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், இந்த புதிய திட்டத்தின் கீழ் உள்ளூர் ஸ்பான்சர் எவரும் இல்லாமலேயே தகுதியுடைய வெளிநாட்டுப் பணியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு நேரில் சென்று நேரடியாக வேலை தேட முழு அனுமதி வழங்கப்படுகிறது.
வேலை தேடுபவர்களின் தேவைக்கேற்ப 60 நாட்கள், 90 நாட்கள் மற்றும் 120 நாட்கள் ஆகிய கால வரம்புகளில் Single Entry முறையில் இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், இந்தியாவில் உள்ள தகுதியான பட்டதாரிகள் மற்றும் பணியாளர்கள் கையில் முன்னதாகவே வேலைக்கான பணி நியமனக் கடிதம் (Job Offer) எதுவும் இல்லாமல் நேரடியாக எமிரேட்ஸிற்குள் நுழைய முடியும். அங்கே இருந்தபடியே பல்வேறு நிறுவனங்களின் வேலை நேர்முகத் தேர்வுகளில் (Interviews) பங்கேற்கவும், தேர்வாக்கச் செயல்பாடுகளில் (Recruitment Process) நேரடியாகக் கலந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த விசா கிடைக்கும்?
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த விசா உடனடியாக வழங்கிவிடப்பட மாட்டாது; கல்வித் தகுதி, வேலைத் திறன் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே விசா வழங்கப்படும்.
-
திறன் நிலைகள் (Skill Levels): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மனிதவள அமைச்சகத்தின் (MOHRE) வரையறைப்படி, விண்ணப்பதாரர்கள் 1, 2 அல்லது 3 ஆம் நிலைத் திறன் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
-
கல்வித் தகுதி: உலக அளவில் முன்னணி 500 பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில், கடந்த 2 ஆண்டுகளுக்குள் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
-
நிதி ஆதாரம்: எமிரேட்ஸில் தங்கியிருக்கும் காலத்தில் ஆகும் செலவினங்களைச் சமாளிக்கப் போதுமான நிதி ஆதாரம் கைவசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
-
தேவையான ஆவணங்கள்: குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (Passport), சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் அவசியம்.