தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் பரபரப்பான திருப்பங்களுக்கு மத்தியில், தற்பொழுது கூட்டணிக் களம் புதிய விவாதங்களைச் சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பேசியுள்ள அனல் பறக்கும் கருத்துக்கள் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணிக் கணக்குகள் முற்றிலுமாக மாறி வரும் தற்போதைய சூழலில், காங்கிரஸின் அண்மைக்கால நகர்வுகளை உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.
கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளிடையே உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “காங்கிரஸ் கட்சியை இனிமேல் எந்தக் காலத்திலும் நமது கூட்டணியில் சேர்க்கக் கூடாது. வெறும் பதவி ஆசைக்காக, நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கூட்டணியை விட்டுச் சென்ற கட்சி தான் இந்த காங்கிரஸ்” என்று மிக ஆக்ரோஷமாகத் தாக்கினார். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற தேர்தல் வெற்றிகள் எதார்த்தமாக வந்தது கிடையாது என்று சுட்டிக்காட்டிய அவர், தங்களது சுயநலத்திற்காகக் கூட்டணியை முறித்துக் கொண்டவர்களின் உண்மை முகத்தைத் தொண்டர்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றதற்கு முழுக்க முழுக்க நமது திமுக தோழர்களின் அடிமட்ட உழைப்பு தான் காரணம் என்றும், களத்தில் நின்று நாம் உழைத்த உழைப்பால் தான் அவர்கள் இன்று டெல்லி வரையிலும் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்றும் அவர் பேசினார். களப்பணியில் ஈடுபடாமல், திமுகவின் உழைப்பை மட்டுமே நம்பி வென்ற ஒரு கட்சி, தற்பொழுது காட்டியிருக்கும் இந்த துரோகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து கொண்டு பின்முதுகில் குத்தும் வேலைகளில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகச் சரியான நேரத்தில் தேர்தல் களத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார். இனி வரும் காலங்களில் மற்ற கட்சிகளின் தயவை எதிர்பாராமல், திமுகவின் சொந்த பலத்தையும், இளைஞரணியின் உழைப்பையும் மட்டுமே நம்பிக் களமிறங்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.
பதவி ஆசைக்காக ஓடும் கட்சிகளின் சுயரூபத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, எதிர்வரும் தேர்தல் களங்களில் திமுகவின் அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த நேரடி அட்டாக், தமிழக காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்களில் தற்பொழுது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்குப் பதில் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து என்ன மாதிரியான அறிக்கைகள் வரப்போகிறது என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த அரசியல் உலகமும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.





