மின்தடை, சைபர் தாக்குதல் அபாயம்… அவசரகாலத்திற்குத் தயாராகுங்கள்: பிரிட்டன் அரசு தொடங்கியுள்ள ‘பி ரெடி’ விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து பல்வேறு சேவைத் தடைகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் தலைதூக்கி வரும் சூழலில், பிரிட்டன் மக்களை எச்சரிக்கும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் குளிர்சாதனப் பெட்டிகள் ஹேக் செய்யப்படுவது, மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் போன்ற சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இத்தகைய சூழலில், மின்சாரம், குடிநீர், இணையம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் ஒரே நேரத்தில் முடங்கும் அபாயத்தை எதிர்கொள்ளப் பிரிட்டன் மக்களைத் தயாராக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவை அச்சுறுத்தும் ‘பிளாக் ஸ்கை’ பேரழிவு அபாயம்

‘பிளாக் ஸ்கை’ (Black Sky Event) என்பது வழக்கமான மைக்ரோ மின்தடை போன்றது அல்ல. சைபர் தாக்குதல்கள், கடுமையான இயற்கைப் பேரிடர்கள் அல்லது தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாக நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள் அடுத்தடுத்துச் செயலிழந்து, மக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்படும் பேராபத்தையே இது குறிக்கிறது.

உதாரணமாக, ஒரு பெரிய சைபர் தாக்குதல் காரணமாக மின்சார விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்படலாம்; அதன் தொடர்ச்சியாக மொபைல் நெட்வொர்க், இணையம் மற்றும் குடிநீர் விநியோகமும் முற்றிலுமாக முடங்கக்கூடும். இதுபோன்ற தொடர் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காகப் பிரிட்டன் அரசு ‘பி ரெடி’ (Be Ready) என்ற மூன்று ஆண்டுகால அவசரகாலத் தயார்நிலை பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது மூன்று நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தங்கள் வீடுகளில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் சேமிப்பு

அவசர உதவிகள் கிடைக்கும் வரை குடும்பங்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் உணவுப் பிரிவில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் குடிநீர் என்ற கணக்கில் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டும்.

சமைக்கவோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவோ தேவையில்லாத டின் உணவுகள், உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற எளிதில் கெட்டுப்போகாத உணவுப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசரகாலச் சாதனங்களைப் பொறுத்தவரை, மின்சாரம் இல்லாத நேரத்திலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள பேட்டரி அல்லது கையால் சுற்றி இயக்கக்கூடிய ரேடியோ, மொபைல் போன்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க், டார்ச் லைட், கூடுதல் பேட்டரிகள் மற்றும் குளிர்கால ஆடைகள் அவசியம்.

மேலும், இணையச் சேவைகள் முடங்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம் என்பதால் தேவையான சில்லறைக் காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட், அடையாள அட்டை மற்றும் காப்பீட்டு ஆவணங்களின் நகல்களுடன், அவசர எண்களையும் காகிதத்தில் எழுதிப் பாதுகாக்க வேண்டும்.

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அரசின் விளக்கம்

இந்தப் பொருட்களை ஒரே நேரத்தில் வாங்கத் தேவையில்லை என்றும், வழக்கமான மளிகைப் பொருட்கள் வாங்கும்போதே சிறிது சிறிதாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எதிர்பாராத பேரிடர் சூழல்களில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையே இந்த ஏற்பாடு என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் உள்ளிட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.