சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று (மே 21, 2026) காலை நடைபெற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்க விழா, தொடங்கிய சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய அரசியல் விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது.
ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட முதல் கட்ட விழாவின் போது எந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததோ, அதே நிகழ்வு இன்றைய விழாவிலும் மீண்டும் அரங்கேறியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்கியதும், வழக்கமாகத் தமிழக அரசு விழாக்களில் முதலாவதாகப் பாடப்படும் மாநில வாழ்த்துப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ புறக்கணிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடல் முதலாவதாக இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்பட்டு, அதன்பின்னரே இறுதியாகத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு ஒலிக்கப்பட்டது. தமிழக வரலாற்றில் மாநில வாழ்த்துப் பாடல் இவ்வாறு பின்னுக்குத் தள்ளப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போது, ஒன்றிய அரசு ஆளுநர்களுக்கு அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையின் (New Protocol Circular) அடிப்படையிலேயே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தவெக அரசுக்குத் வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்தச் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழ் மண்ணின் பாரம்பரிய அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநரின் அழுத்தத்திற்குப் பணிந்து மீண்டும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளியிருக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் இந்த சுப வேளையில் எழுந்துள்ள இந்த விவாதம் தவெக அரசுக்குச் சிறு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.





