தமிழகத்தில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய விரிவுபடுத்தப்பட்ட திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற சாதாரண பேருந்துகள், லிமிடெட் ஸ்டாப் சர்வீஸ் (LSS), டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், புறநகர் சாதாரண பேருந்துகளில் பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் முற்றிலும் இலவசமாகப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயும் தடையின்றிப் பயணிக்க முடியும் என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் அரசு பேருந்துகளையே முதன்மைப் போக்குவரத்துச் சாதனமாகத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
அரசுத் தரப்பில் இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இதன் மறுபக்கப் விளைவாகத் தனியார் போக்குவரத்துத் துறை கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பாதைகளில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விடக் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பல தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களது அன்றாட இயக்கச் செலவுகளைக்கூட ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். வருமான இழப்பை ஈடுசெய்யும் நோக்கில் சில வழித்தடங்களில் தனியார் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், பயணிகள் வருகை மேலும் சரிவையே சந்தித்துள்ளது.
இந்த நிலையை விளக்கி, தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசு இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தங்களது பேருந்துகளில் பயணிக்க ஆட்களே இல்லாமல் பயணத்தைத் (Trip) ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். பேருந்து உரிமையாளர்கள் மட்டுமின்றி, அதில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் தினசரி வாழ்வாதாரமும் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது.
தனியார் பேருந்துகளைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களான திருச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இத்திட்டத்தால் தங்களது வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் வேதனை தெரிவிக்கின்றனர். காலை முதல் மாலை வரை காத்துக் கிடந்தும் ஒரு சவாரிகூடக் கிடைக்காமல் வெறுங்கையோடு வீடு திரும்பும் அவலநிலை ஏற்படுவதாக அவர்கள் குமுறுகின்றனர். அரசு இத்தகைய மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் அதே வேளையில், தனியார் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.