டெல்லி அடுத்த உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுத்த கடுமையான சித்திரவதை காரணமாக, தீபிகா நாகர் (25) என்ற இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி வெறும் ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில், அந்த இளம்பெண் தங்கியிருந்த குடியிருப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நொய்டா போலீசார், தீபிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய தீபிகாவின் பெற்றோர், “எங்களது மகளின் திருமணத்திற்காக நகைகள், சீர்வரிசை என கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை தாராளமாகச் செலவு செய்தோம். அப்படி இருந்தும் அவளது கணவர் குடும்பத்தினரின் பணப்பசி அடங்கவில்லை. மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவளைத் தொடர்ந்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்தனர்” என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெற்றோரின் இந்த புகாரைத் தொடர்ந்து, இந்த மரணத்தை வரதட்சணை கொடுமையால் தூண்டப்பட்ட தற்கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தீபிகாவின் கணவர் மற்றும் அவரது மாமனார் ஆகிய இருவரையும் போலீசார் இன்று முறைப்படி கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள மற்ற உண்மைகள் மற்றும் குடும்பத்தினரின் கொடூரமான சித்திரவதைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணமான மிகக் குறுகிய காலத்திலேயே வரதட்சணை கொடுமையால் ஒரு இளம் உயிர் பறிபோயிருக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





