மகாராஷ்டிராவில் ஆன்லைன் ஷேர் மார்க்கெட் முதலீட்டு மோசடியில் ஈடுபட்டு, 70 வயது முதியவரிடம் இருந்து ரூ.1.29 கோடி நூதன முறையில் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், இது போன்ற மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவரை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் இந்த மோசதியை அரங்கேற்றியுள்ளனர். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்று முதியவரிடம் அவர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். இதனை நம்பிய அவரை வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைத்த மோசடி கும்பல், போலி வர்த்தக செயலி ஒன்றை (Fake Trading App) பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதியவரிடம் இருந்து பல்வேறு கட்டங்களாகத் ஆன்லைன் மூலமாக மொத்தம் ரூ.1.29 கோடியை அந்த கும்பல் பறித்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு தான் முதலீடு செய்த பணத்தை முதியவர் திரும்பப் பெற முயற்சித்தபோது, கூடுதல் தொகையாக ரூ.20 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று மோசடி நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், உடனடியாகக் காவல் நிலையத்தை நாடிப் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட முதியவரின் புகாரின் அடிப்படையில், இதுகுறித்து சைபர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தக செயலிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக வரும் அதிக லாப ஆசை விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.