The Nagarwala Mystery: பிரதமரின் ரகசிய போன் கால்… எஸ்பிஐ வங்கியில் இருந்து மாயமான ரூ.60 லட்சம்! 24 மணி நேரத்தில் கைது… அடுத்தடுத்து மர்ம மரணங்கள்! 50 ஆண்டுகளைக் கடந்தும் இந்தியாவின் மெகா மர்மமாக நீடிக்கும் நாகர்வாலா வழக்கு!

இந்தியாவின் அரசியல் மற்றும் வங்கியியல் வரலாற்றில், ஐந்து தசாப்தங்களைக் கடந்தும் இன்றுவரை விடை தெரியாத, கேட்கும் போதே நரம்புகளை முறுக்கேற்றும் ஒரு நிஜ த்ரில்லர் கதை தான் ‘நாகர்வாலா விவகாரம்’ (The Nagarwala Case). கடந்த 1971 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) நாடாளுமன்ற வீதி கிளையில் அரங்கேறிய இந்தச் சம்பவம், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் அரசாங்கத்தையே உலுக்கியது.

ஒரு மர்மமான தொலைபேசி அழைப்பு, கண் இமைக்கும் நேரத்தில் வங்கியிலிருந்து மாயமான ரூ.60 லட்சம் பணம், அடுத்தடுத்து நிகழ்ந்த விசித்திரமான விபத்துக்கள் மற்றும் மரணங்கள் எனப் பல சினிமா படங்களையும் மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்த அந்த மெகா மர்மத்தின் பின்னணி இதோ.

1971 ஆம் ஆண்டு மே மாதத்தின் ஒரு சாதாரண காலைப் பொழுது. எஸ்பிஐ வங்கியின் தலைமை கேஷியரான வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் பேசிய நபர், தான் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளர் பி.என்.ஹாக்ஸர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அடுத்த சில வினாடிகளில், மற்றொரு கம்பீரமான பெண் குரல் லைனில் வருகிறது. அக்குரலைக் கேட்ட கேஷியர் மல்ஹோத்ரா, அது பிரதமர் இந்திரா காந்தியின் குரல் தான் என்று முழுமையாக நம்புகிறார்.

மறுமுனையில் பேசிய அந்தப் பெண் குரல், “வங்கதேச விடுதலைப் போருக்கான ஒரு அதிரடி ரகசிய ராணுவ விவகாரத்திற்காக அவசரமாக 60 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இதனை உடனடியாகத் தயார் செய்து, நான் அனுப்பும் ‘ருஸ்தம் சோஹ்ராப் நாகர்வாலா’ (Rustom Sohrab Nagarwala) என்ற ரகசிய ஏஜென்ட்டிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வ ரசீது பின்னர் பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) உங்களுக்கு வழங்கப்படும்” என்று உத்தரவிடுகிறது. அன்றைய காலகட்டத்தில் ரூ.60 லட்சம் என்பது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரிய தொகையாகும். பிரதமரின் நேரடி உத்தரவு என்று நம்பிய மல்ஹோத்ரா, எவ்வித ரசீதோ அல்லது மேலதிகாரிகளின் அனுமதியோ இன்றி, பண மூட்டைகளுடன் டெல்லியின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நாகர்வாலாவிடம் பணத்தை ஒப்படைக்கிறார்.

பணத்தைக் கொடுத்துவிட்டு, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதமர் அலுவலகத்திற்கு மல்ஹோத்ரா நேரில் சென்றபோதுதான், அவருக்குத் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரதமர் இந்திரா காந்தியோ அல்லது அவரது செயலாளரோ அப்படி ஒரு போன் காலை செய்யவே இல்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறினர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மல்ஹோத்ரா அலறியடித்துக் கொண்டு டெல்லி போலீசில் புகார் அளித்தார்.

டெல்லி போலீசார் உடனடியாக களமிறங்கி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியான முன்னாள் ராணுவ கேப்டன் நாகர்வாலாவைக் கைது செய்து, அவரிடமிருந்த பெரும்பாலான பணத்தையும் மீட்டனர். ஆனால், இதன் பிறகுதான் உண்மையான மர்மமே தொடங்குகிறது. கைது செய்யப்பட்ட நாகர்வாலா, தான் இந்திரா காந்தி போலக் குரல் மாற்றிப் பேசி (Mimicry) தனியாகவே இந்த மோசடியைச் செய்ததாகக் ஒப்புக்கொண்டார். பொதுவாக இந்தியாவில் ஒரு சிறிய திருட்டு வழக்கு கூட பல மாதங்கள் இழுத்தடிக்கும் சூழலில், இந்த மெகா மோசடி வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு வெறும் சில நாட்களுக்குள் மின்னல் வேகத்தில் முடிக்கப்பட்டு, நாகர்வாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பல தசாப்தங்களாக வங்கிப் பணியில் இருக்கும் ஒரு சீனியர் கேஷியர், வெறும் ஒரு போன் காலை மட்டும் நம்பி, இவ்வளவு பெரிய தொகையை யாரிடமும் கேட்காமல் எப்படித் தூக்கிக் கொடுப்பார்? நாகர்வாலா உண்மையிலேயே தனியாகத்தான் செயல்பட்டாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவின. இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியான டெல்லி போலீஸ் அதிகாரி டி.கே. கஷ்யப், ஒரு மர்மமான சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதற்கடுத்த சில மாதங்களிலேயே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகர்வாலாவும் கடுமையான நெஞ்சுவலி காரணமாகத் தனது தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தத் தொடர் மரணங்கள், இந்த வழக்கின் பின்னால் ஏதோ ஒரு மிகப்பெரிய விடைதெரியாத அரசியல் ரகசியம் மறைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்தது. இதற்கிடையில், வங்கி கேஷியர் மல்ஹோத்ரா பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க நீதிபதி ஜெகன்மோகன் ரெட்டி (Justice Jaganmohan Reddy) தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விசாரணைகளை நடத்தி, இறுதியாக 800-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், நாகர்வாலாவின் வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, முறையான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இன்றி நீதிமன்றம் இவ்வளவு அவசரமாகத் தீர்ப்பளித்திருக்கக் கூடாது என்று கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும், அந்தப் பணம் உண்மையில் எஸ்பிஐ வங்கியுடையது தானா அல்லது பிரதமர் அலுவலகத்தின் ரகசிய கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற சந்தேகங்களையும் அந்த அறிக்கை எழுப்பியது.

இன்று இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இந்திரா காந்தி, ஹாக்ஸர், கேஷியர் மல்ஹோத்ரா, நாகர்வாலா என முக்கியப் புள்ளிகள் அனைவரும் உயிருடன் இல்லை. இதனால், அந்த 60 லட்சம் ரூபாய் எதற்காக எடுக்கப்பட்டது, அந்தப் போன் காலின் பின்னணியில் இருந்த நிஜ சூத்திரதாரி யார் என்ற உண்மைகள், காலத்தின் பக்கங்களுக்குள் என்றும் வற்றாத ஒரு மர்மமாகவே புதைந்து கிடக்கின்றன.