குஜராத் மாநிலம் சூரத் நகரில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள துணிகர வங்கி கொள்ளை சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அங்குள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கிளைக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், பல கோடி மக்கள் பார்க்கும் சினிமா மற்றும் வெப் சீரிஸ் பாணியில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.
மிகவும் பிரபலமான ‘மணி ஹீஸ்ட்’ (Money Heist) வெப் சீரிஸில் வருவது போலவே, பட்டப்பகலில் சூரத் SBI-யில் கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்துள்ளனர். உள்ளே நுழைந்தவுடன் அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்களைத் தரையில் முட்டி போட வைத்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பிணைக் கைதிகளாக மாற்றப்பட்டனர்.
ரூ. 50 லட்சம் கொள்ளை: வங்கியின் லாக்கர் மற்றும் பணப் பெட்டிகளைத் திறக்கச் சொல்லி மிரட்டிய அந்தக் கும்பல், வெறும் சில நிமிடங்களிலேயே சுமார் ரூ. 50 லட்சம் ரொக்கத்தைப் பைகளில் அடைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்த மொத்தக் காட்சிகளும் வங்கியின் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
போலீசார் அதிரடி விசாரணை: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சூரத் நகரம் முழுவதும் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, தப்பியோடிய வாகனங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருப்பது வங்கிப் பாதுகாப்பு குறித்தப் பெரிய கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளது.