பிரபல நடிகை வினோதினி வைத்தியநாதன், தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது வேட்பாளர்கள் மேற்கொண்டு வரும் வினோதமான பிரச்சார முறைகளை, அவர் தனது பாணியில் மிகவும் நுணுக்கமாகக் கிண்டல் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், தவெக வேட்பாளர்கள் கடந்து வந்த பிரச்சாரப் பாதையை வினோதினி நகைச்சுவையுடன் பட்டியலிட்டுள்ளார். “முதலில் தனியாகப் பிரச்சாரம் செய்தார்கள், அப்புறம் தலைவரோடு கட்-அவுட் வைத்துச் செய்தார்கள், அப்புறம் தலைவரோடு டூப் (Lookalike) வைத்துப் பிரச்சாரம் செய்தார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் தனது வாகனத்தில் இருந்து கை அசைத்ததையே (டாடா காட்டினார்) ஒரு பெரிய வெற்றியாகக் கருதி, அதில் கிடைத்த உற்சாகத்தில் மீண்டும் தனியாகப் பிரச்சாரம் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல்ல தனியா பிரச்சாரம் பண்ணினாங்க
அப்புறம் தலைவரோட கட் அவுட் வெச்சு பிரச்சாரம் பண்ணினாங்க
அப்புறம் தலைவரோட டூப்போட பிரச்சாரம் பண்ணினாங்க
அப்புறம் அவரு வண்டியிலேர்ந்து டாடா காட்டினாருன்னு சந்தோஷத்துல தனியா பிரச்சாரம் பண்ணினாங்க
இப்போ தலைவரோட ஹோலோகிராம் வெச்சு பிரச்சாரம் பண்றாங்க…— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) April 13, 2026
தற்போதுள்ள அதிநவீன மாற்றம் குறித்து, “இப்போது தலைவரோடு ஹோலோகிராம் (Hologram) வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று வினோதினி கிண்டலடித்துள்ளார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தலைவரை நேரில் கொண்டு வராமல் பிம்பமாகத் திரையில் காட்டுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இறுதியாக ஒரு கூர்மையான கேள்வியையும் எழுப்பியுள்ளார்: “தலைவரோடு வேட்பாளர்கள் சேர்ந்து எப்போது பிரச்சாரம் பண்ணுவார்கள்?” என்பதே அந்த கேள்வி.
சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகத் தொடங்கியது. விஜய்யின் பல பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வரும் சூழலில், வேட்பாளர்கள் தலைவரை நேரில் பார்க்க முடியாமல் கட்-அவுட்களையும், தொழில்நுட்பங்களையும் நம்பியிருப்பதை நடிகை வினோதினி வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகை வினோதினியின் இந்த ‘பஞ்ச்’ பதிவு, தேர்தல் களத்தில் தவெக-வின் வியூகங்கள் குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. “டிஜிட்டல் பிரச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும், களத்தில் மக்கள் தலைவரை நேரில் எதிர்பார்க்கிறார்கள்” என்ற எதார்த்தத்தை இந்தப் பதிவு பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில், இத்தகைய விமர்சனங்களுக்குத் தவெக மேடைகளில் விஜய் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.





