தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு மேகதாதுவில் தன்னிச்சையாக அணை கட்டுவதைக் கண்டித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்திற்குப் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர், “தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயலும் மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு. காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமை பறிபோவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று முழங்கினார்.
மேலும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமை என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது எடுத்த ஆக்கப்பூர்வமான சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் போராட்டங்கள் மூலம் பெற்றது என்பதை நினைவு கூர்ந்த அவர், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேகதாது அணைக்கு எதிராக எடுத்த தொடர் நடவடிக்கைகளை அவையில் அடுக்கினார்:
-
தொடர் கடிதங்கள் மற்றும் கூட்டங்கள்: 2021 மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுமே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பிரதமருக்கும், ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதங்களை எழுதினார். தொடர்ந்து அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி கூட்டுத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
-
அரசினர் தனித் தீர்மானம் (2022): கர்நாடக அரசு அணை கட்ட ₹1000 கோடி ஒதுக்கியபோது, அதற்கு எதிராகத் இதே அவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தொழில்நுட்ப முடக்கம்: திமுக அரசின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே, மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) 2022-ல் மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியதுடன், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அதன் ‘டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ்’ (Terms of Reference) அனுமதியைத் தனது திட்டப் பட்டியலில் இருந்து நீக்கியது.
மத்திய நீர்வள ஆணையத்தின் (CWC) 2018 நிபந்தனைகள்: மத்திய நீர்வள ஆணையம் 22.11.2018 அன்று கர்நாடகாவிற்கு விதித்த நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டிய திமுக உறுப்பினர், “மேகதாது அணைக்கு நிபந்தனையற்ற அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. DPR தயாரிப்பதற்கு முன்பாகத் தமிழகத்தின் ஆட்சேபனைகளைப் பரிசீலிக்க வேண்டும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் (CWMA) முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது” என்றார்.
முக்கியத் திருத்தம் மற்றும் கூட்டுக்குழு கோரிக்கை: கடந்த 13.01.2025 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, 04.03.2026 அன்று அன்றைய திமுக அரசு ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தின்படி, இப்போதைய தீர்மானத்தில் ஒரு முக்கியத் திருத்தத்தைச் சேர்க்க வேண்டும் என்று திமுக கோரியுள்ளது. அதாவது, “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956, பிரிவு 4-ன் கீழ் (Interstate River Water Disputes Act 1956 Section 4) மேகதாது விவகாரத்தை ஒரு புதிய தவா-வாகக் கருதி, புதிய நடுவர் மன்றம் (New Tribunal) அமைக்க ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற வரிகளைச் சேர்க்க வேண்டும் எனத் திருத்தம் கோரப்பட்டது.
இறுதியாக, ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாததால் தற்பொழுது டெல்டா பகுதியில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய திமுக, வரவிருக்கும் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு உரிய நீரைப் பெற்றுத்தர வேண்டும் என்று கோரியது. மேலும், இந்தத் தீர்மானத்தைக் கடிதமாக அனுப்பாமல், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழகத்தின் அனைத்துக் கட்சி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாக நேரில் டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் வழங்கி நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு திமுக தயாராக இருப்பதாகவும் கூறி தங்களது முழு ஆதரவை அவர் பதிவு செய்தார்.





