தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு மேகதாதுவில் தன்னிச்சையாக அணை கட்டுவதைக் கண்டித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது முழுமையான, ஒருமனதான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள், ‘ரமணா’ திரைப்பட பாணியில் காவிரியின் கிலோமீட்டர் மற்றும் டிஎம்சி (TMC) புள்ளிவிவரங்களை அடுக்கிக் கணக்குப்போட்டுப் பேசியது ஒட்டுமொத்த அவையையும் உற்றுநோக்க வைத்தது.
“காவிரி நீர் என்பது நம்முடைய தமிழ்நாட்டின் உயிர்நாடி. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்களும், 8 கோடி மக்கள் தொகையில் 5.5 கோடி மக்களும் காவிரியை நம்பித்தான் இருக்கின்றார்கள்” என்று தனது உரையைத் தொடங்கிய சௌமியா அன்புமணி, காவிரியின் பயண வரைபடத்தை (Travel Map) புள்ளிவிவரங்களுடன் விவரித்தார்:
-
காவிரியின் பயண வரைபடம்: குடகு மலையில் (கூர்ஹ்) ஆரம்பித்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக ஓடி, தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாகத் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது காவிரி. மொத்தமுள்ள 800 கிலோமீட்டர் பயணத்தில், வெறும் 320 கிமீ மட்டும்தான் கர்நாடகாவிற்குள் பாய்கிறது. மாநில எல்லையில் 60 கிமீ பாயும் காவிரி, சிங்காரத் தமிழ்நாட்டிற்குள் தான் சிங்கம் போல அதிகபட்சமாக 420 கிலோமீட்டர் ஓடுகிறது.
-
உரிமை யாருக்கு?: “அப்படிப் பார்த்தால் ஒட்டுமொத்த காவிரியின் 740 டிஎம்சி தண்ணீரில் அதிக உரிமை தமிழ்நாட்டிற்குத்தான் இருக்கிறது. தொடக்கத்தில் நமக்குரிய 404 டிஎம்சி தண்ணீர், நாளடைவில் நடுவர்மன்றத் தீர்ப்புகளால் குறைந்து தற்பொழுது 177.25 டிஎம்சி ஆக மாற்றப்பட்டுள்ளது” என்று கணக்குகளை அடுக்கினார்.
மேகதாதுவின் ஆபத்தும் டெல்டா பாலைவனமும்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கீழ்மடை (கடைமடை) மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகா எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், கர்நாடகாவின் தற்போதைய அணை கொள்ளளவுகளையும் விவரித்தார். “ஏற்கனவே கிருஷ்ணராஜசாகர் (1931), ஹாரங்கி, கபினி, ஹேமாவதி (1970-கள்) ஆகிய 4 அணைகள் மூலம் கர்நாடகாவால் 115 டிஎம்சி தண்ணீரைத் தேக்க முடியும். இப்பொழுது மேகதாதுவில் புதியதாக அணை கட்டினால் மேலும் 70 டிஎம்சி தண்ணீரைத் தேக்கலாம். இதன்மூலம் மொத்தக் கொள்ளளவு 185 டிஎம்சி ஆக உயர்ந்துவிடும். அப்படி நடந்தால் தமிழகத்திற்கு வரவேண்டிய 177 டிஎம்சி தண்ணீரில் ஒரு சொட்டு நீர் கூட வராது; டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் பாலைவனமாகிவிடும்” என்று எச்சரித்தார்.
மேட்டூர் அணை மற்றும் குருவை சாகுபடி நிலவரம்: தற்போதைய நிலவரப்படி, 92 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் வெறும் 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஜூன் 12-ஆம் தேதி வழக்கமாகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, தற்பொழுது ஜூன் 20 ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தென்மேற்குப் பருவமழையை (South West Monsoon) நம்பியுள்ள டெல்டா பகுதி விவசாயிகளின் குருவை சாகுபடி தற்பொழுது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதிருக்கும் 40 டிஎம்சி தண்ணீர் குடிநீருக்காக மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் வருங்காலத்தில் குடிநீருக்குக் கூட மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.
உச்சநீதிமன்ற மற்றும் காவிரி நடுவர்மன்றத் தீர்ப்புகள் தமிழகத்திற்குச் சாதகமாக உள்ளதால், அரசு இதனை முனைப்புடன் கையாண்டு மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சௌமியா அன்புமணி, முதலமைச்சர் கொண்டு வந்த இத்தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி முழுமனதோடு ஆதரிப்பதாகக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.





