சட்டமன்றத்தில் அதிரடி!: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் – 2 நாள் புத்தாக்கப் பயிற்சி முடிந்து அலுவல் தொடக்கம்! மேகதாது அணைக்கு எதிராகத் தமிழக அரசு ஒருமனதாகத் தனித் தீர்மானம்!

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ-க்களுக்கான 2 நாள் புத்தாக்கப் பயிற்சி (Orientation Program) சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தவெக அரசின் முதல் கூட்டத்தொடரின் அதிகாரப்பூர்வ 2 நாள் சட்டமன்ற அலுவல் பணிகள் தற்பொழுது முறைப்படி தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், தமிழகத்தின் மிக முக்கியமான காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், கர்நாடக அரசு மேகதாதுவில் தன்னிச்சையாக அணை கட்டுவதைத் தடுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு தனித் தீர்மானம் ஒன்றை அவையில் முன்மொழிந்துள்ளார்.

சட்டமன்றத்தில் இத்தீர்மானத்தை வாசிப்பதற்கு முன்பாகப் பேசிய முதலமைச்சர், “அரசியல் என்பது மக்களுக்கானது தான்; அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களுக்காகவே செயல்படுகின்றன. கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் கட்சிகளுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்று வரும்போது அனைத்து கட்சிகளும் மக்கள் பக்கமே நிற்கும். மனசாட்சி உள்ள ஒரு மக்களாட்சியாக நீடிப்பதே எங்களது ஒரே விருப்பம். நமது விவசாயிகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரமான நீராதாரம் மற்றும் நதிநீர் உரிமைக்காகவும் நின்றே ஆக வேண்டியது நமது கடமை, உரிமை, அதைத் தாண்டிய நமது உயிரான உணர்வு” என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டார். கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் யாரையும் குறை சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கோவாவில் பிரம்மாண்ட திருமணம்! குஷ்பூ - சுந்தர் சி மகள் அவந்திகாவின் வெட்டிங் போட்டோஸ் அவுட்! திரையுலக ஜாம்பவான்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்!

சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

  • தீர்ப்புகளுக்கு எதிரான செயல்: காவிரி நடுவர் மன்றம் கடந்த 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்புமிகு உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எவ்வித அனுமதியுமின்றி கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; இச்செயலுக்கு இப்பேரவை தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.

  • அனுமதி மறுப்பு கோரிக்கை: கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்குத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதிகளையும் வழங்கக் கூடாது என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

  • கூடுதல் நீர் பயன்பாட்டுத் தடை: காவிரி படுகை என்பது ஒரு பற்றாக்குறை படுகை (Deficit Basin) என நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டு, அதன் மொத்த நீரையும் படுகை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளித்துவிட்டதால், காவிரி படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ அல்லது கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது.

  • மத்திய அரசுக்கு வலியுறுத்தல்: பிற படுகை மாநிலங்களின் இசைவின்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையின் வேறு எந்த இடத்திலோ புதிய நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசிற்கு அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது.

  • திட்ட அறிக்கை நிராகரிப்பு: கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கவோ அல்லது அதற்கு ஒப்புதல் அளிக்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் (CWC) இப்பேரவை வலியுறுத்துகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  High Drama in Tambaram! Woman Cop Cries on Road!: "நீங்க சிங்கப் பெண்... அழாதீங்கம்மா!" பொதுமக்கள் திரண்டு ஆறுதல்! உயர் அதிகாரி கண்டித்ததால் பரபரப்பு!

தவெக அரசின் இந்த முதல் கூட்டத்தொடரில், கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நலனையும் பாதுகாத்திடத் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து சட்டப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான, ஒருமனதான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்மானத்தை முதலமைச்சர் சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.