வாரிசு சிம்மாசனம் காலி!: “தாத்தா, மகன், பேரன்னு திளைக்குற உங்களுக்கு ஜனநாயக சோபா பத்தி என்ன தெரியும்?” உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் செம பதிலடி!

தமிழக அரசியல் களம் தற்பொழுது ஆளும் தமிழக வெற்றி கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான “சோபா” விவாதத்தால் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தவெக அரசில் திமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் விலகி இணைந்து வருவதை மறைமுகமாகச் சாடும் வகையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சோபாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சித்திருந்தார். இதற்குத் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் மாண்புமிகு அருண்ராஜ் அவர்கள் மிகக் கடுமையான வார்த்தைகளால் நேரடி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் தனது அதிகாரப்பூர்வ பதிவில், “தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரைத் தங்களின் சுயநல அரசியலுக்குக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, தாத்தாவுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரே ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தில் ஊறித் திளைக்கும் சனாதன சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசு தலைவர் திரு. உதயநிதி அவர்களே!” என்று மிகக் காட்டமாக வார்ந்துள்ளார். மேலும், அதிகாரத்தைப் பரவலாக்கி, எல்லோரையும் சமமாக அமரவைக்கும் ‘ஜனநாயக சோபாக்கள்’ பற்றி வாரிசு அரசியலில் வந்த உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "வேடிக்கை பார்க்க மாட்டோம்!" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் விடுத்த இறுதி எச்சரிக்கை; திமுகவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் அதிரடிப் பிரச்சாரம்!

தொடர்ந்து பேசிய அமைச்சர், “இது வெறும் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் மட்டும் அமரும் நாற்காலி அல்ல; மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த அமைச்சர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சமமாக அமர்ந்திருக்கும் தூய்மையான ஜனநாயக சோபா இது. சனாதன சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பவர்களுக்கு, எங்களின் ஜனநாயக சோபாக்களைப் பற்றிப் பேசுவதற்கு எந்தவொரு அருகதையோ அல்லது யோக்கியதையோ கிடையாது” என்று சாடியுள்ளார்.

கடந்த மே மாதம் 4ஆம் தேதியோடு தமிழ்நாட்டில் வாரிசுகளின் சிம்மாசன ஆட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை நினைவூட்டிய அமைச்சர் அருண்ராஜ், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அனைவருக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்கக்கூடிய உண்மையான ஜனநாயகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்று தனது பதிவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக மற்றும் திமுக இடையே சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் குறித்த வார்த்தைப் போர் நீடித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த அதிரடிப் பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.