மத்திய அரசின் “வளர்ச்சி அடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” (Viksit Bharat – G RAM G Act, 2025) நாடு முழுவதும் வரும் ஜூலை 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நாளை முதல் இந்த ‘விபிஜி ராம்ஜி’ (VPG RAM G) திட்டம் புதிய விதிமுறைகளுடன் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், தற்போது நடைமுறையில் இருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக முழுமையாக உயர்த்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இத்திட்டத்திற்கான நிதிப் பங்கீடு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 75:25 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் தங்களது பங்குத் தொகையைச் செலுத்த உள்ளதாகச் செய்தியாளர் பாஸ்கர் கூடுதல் விவரங்களை வழங்கியுள்ளார்.
இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக நான்கு முக்கியக் கருப்பொருட்களின் (Themes) அடிப்படையில் ஒருங்கிணைந்த தொகுப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீர் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைப் பணிகள், முக்கியக் கிராமப்புற உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் சார்ந்த உட்கட்டமைப்பு, மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிப்பதற்கான சிறப்புப் பணிகள் மற்றும் பேரிடர் தயார் நிலை ஆகிய அம்சங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. கிராம பஞ்சாயத்துகளின் பங்கேற்பு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் தேவைகள் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமை வரிசைப்படி இந்த வேலைவாய்ப்புத் திட்டம் நாளை முதல் கிராமப்புறங்களில் முழு வீச்சில் செயல்படுத்தப்பட உள்ளது.





