“தினமும் ஒரே சாப்பாடு கிடையாது!” – பள்ளிக் குழந்தைகளுக்கு ஜாக்பாட்! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் வருகைப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாபெரும் விரிவாக்கம் காணவுள்ளது! சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் இத்தகவலைத் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

34.64 லட்சம் மாணவர்களுக்குக் காலை உணவு! செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மாபெரும் விரிவாக்கம் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி காலை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் புதிதாக 15,454 பள்ளிகளைச் சேர்ந்த 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயனடைவார்கள். இதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 64 ஆயிரத்து 371 ஆக உயரும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விதவிதமான சுவையான உணவு – சமையல் வல்லுநர்கள் குழு! மாணவர்களுக்கு ஒரே மாதிரியான உணவை வழங்காமல், சுவையான மற்றும் சத்தான உணவுகளை வழங்குவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். “ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவுப் பட்டியலைத் தயாரித்து வழங்க வேண்டும் என்றும், சமையல் கலை நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அமைத்து விதவிதமாகவும் வித்தியாசமாகவும் உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்குப் பிடித்தமான உணவை வழங்குவதே அரசின் முதன்மை நோக்கம்” என அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மதுரையில் வெடித்த அமைச்சர் நிர்மல் குமார்! எடப்பாடி - ஸ்டாலின் கூட்டு சதி! டிடிவி துரோகம்!

“என்றும் இருமொழிக் கொள்கையே!” தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “நவோதயா பள்ளிகள் குறித்து நீதிபதி தனது கருத்தைத்தான் கூறியுள்ளார்; அது இறுதித் தீர்ப்பு அல்ல. அன்றும், இன்றும், என்றும் இருமொழிக் கொள்கையே திராவிட மாடல் அரசின் உறுதியான கொள்கை. இந்த நிலைப்பாட்டில் நாங்கள் சிறிதும் தளர்வின்றி உறுதியாக இருக்கிறோம்” என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.