உலகை உலுக்கும் போர்கள், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, உலகப் பெருங்கடல்களின் பெயர்களையே மாற்றி எழுதுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. டென்னசி மாநிலம் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தீவிர பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விசித்திரமான மற்றும் அதிரடியான யோசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய டிரம்ப், “நமக்கு வளைகுடா இருக்கிறது, அழகான ஏரிகள் உள்ளன, இப்போது ஒரு நதியும் பெருங்கடலும் தேவைப்படுகிறது” என்று கூறிவிட்டு, அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடல்களில் ஒன்றை ‘டிரம்ப் பெருங்கடல்’ (Trump Ocean) அல்லது ‘அமெரிக்கப் பெருங்கடல்’ (Ocean of the Americas) என்று பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் பகிரங்கமாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தனது தற்போதைய பதவிக்காலம் முடிவதற்குள், அதாவது 2028-ஆம் ஆண்டுக்குள் இந்த வரலாற்றுப் பெயர் மாற்ற நடவடிக்கையைத் தான் நிறைவேற்றப் போவதாகவும் அவர் ஆவேசமாக அடித்துக் கூறியுள்ளார்.
ஏற்கனவே மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றியதுடன், ஒன்ராறியோ ஏரியை ‘அமெரிக்கா ஏரி’ என மாற்றிய டிரம்ப், இப்போது உலகின் மாபெரும் பெருங்கடல்களின் மீதும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது சர்வதேச புவியியல் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. புவியியல் ரீதியாகவோ அல்லது சர்வதேச கடல்சார் சட்டங்களின்படியோ இது சாத்தியமா என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, டிரம்பின் இந்த சர்ச்சை பேச்சு உலக அளவில் மீண்டும் ஒரு வைரல் பேசுபொருளாக மாறியுள்ளது!