பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ (IDBI) வங்கியின் பெரும்பான்மைப் பங்குகளைக் கனடாவைச் சேர்ந்த ‘ஃபேர்ஃபேக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ்’ (Fairfax Financial Holdings) நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (CCEA) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீதப் பங்குகள் மொத்தம் ரூ.52,878 கோடிக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த நடவடிக்கை மூலம் மத்திய அரசிடம் உள்ள 30.48 சதவீதப் பங்குகளும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் (LIC) உள்ள 30.24 சதவீதப் பங்குகளும் இணைந்து கனடா நாட்டின் Fairfax Financial Holdings (கேனடா இன்க்) நிறுவனத்திற்கு கைமாறுகின்றன. பங்கு ஒன்றிற்கு ரூ. 81 என்ற அடிப்படையில் இந்த விற்பனை மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்குப் பிறகு வங்கியின் செயல்பாட்டுப் பொறுப்புகள் புதிய நிறுவனத்திடம் செல்லும் அதேவேளையில், மத்திய அரசிடம் 15 சதவீதப் பங்குகளும் எல்ஐசி நிறுவனத்திடம் 19 சதவீதப் பங்குகளும் சாதாரண முதலீடுகளாகத் தொடர்ந்து நீடிக்கும்.
இந்த பங்கு விற்பனை நடவடிக்கை இந்திய நிதித் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ள போதிலும், இந்த விற்பனை ஒப்பந்தம் முழுமையாக முற்றுப்பெற இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முறையான தகுதிச் சான்றிதழ் மற்றும் இறுதி அனுமதி அவசியமாகிறது.
உரிமையாளர் மாற்றம் நடைபெற்றாலும் ஐடிபிஐ வங்கியின் தினசரி வாடிக்கையாளர் சேவைகள், வைப்புத் தொகைகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் வழக்கம் போல் இந்திய ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு விதிகளின் கீழ் எவ்வித பாதிப்புமின்றித் தொடர்ந்து இயங்கும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.