அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான ரிபப்ளிகன் கட்சி சந்தித்த பெரும் தோல்வி குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கவலையையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் அமெரிக்கா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அடியைப் பின்னோக்கி எடுத்து வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
“மீண்டும் பேரெழுச்சியுடன் வருவோம்”
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “கடந்த தேர்தலின் முடிவுகளால் அமெரிக்கா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னோக்கிச் செல்லும் அடியை எடுத்து வைத்துள்ளது. ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை; நாங்கள் முன்பை விட மிகவும் பெரியதாகவும், வலிமையாகவும் மீண்டு வருவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில், பல தசாப்தங்களாக ரிபப்ளிகன் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி (Democrats) அபார வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது.
ஸ்டீபன் மில்லரின் அதிரடி நியமனம்!
தேர்தல் பின்னடைவால் ரிபப்ளிகன் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாகப் (Chief of Staff) தீவிரப் போக்கைக் கொண்ட தனது நெருங்கிய ஆலோசகர் ஸ்டீபன் மில்லரை (Stephen Miller) நியமித்துள்ளார். இதன் மூலம் ஜனநாயகக் கட்சியின் புதிய நாடாளுமன்றத்துடன் கடும் அரசியல் மோதலுக்குத் டிரம்ப் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை (Immigration policy) உருவாக்கக் காரணமாக இருந்தவர் ஸ்டீபன் மில்லர். புதிய நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சியினர், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர். இதனால் அமெரிக்க அரசியலில் வரும் நாட்களில் வெள்ளை மாளிகைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.