ஹார்முஸ் ஜலசந்தியை முந்திய கருங்கடல்: இந்த ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால், இந்த ஆண்டில் ஹார்முஸ் ஜலசந்தியை விடவும் மற்றொரு கடல்வழிப் பாதை வணிகக் கப்பல்களுக்கு மிக அதிக ஆபத்தானதாக மாறியுள்ளதாகச் சர்வதேச ஊடக அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெறும் கருங்கடல் (Black Sea) பகுதியே தற்போது அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள ஆபத்தான கடல் பகுதியாக உருவெடுத்துள்ளது.

கருங்கடலில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கருங்கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரபல கடல்சார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான அம்ப்ரே (Ambrey) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் மட்டும் கருங்கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கப்பல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவங்களில் சிக்கி 30-க்கும் மேற்பட்ட மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட மாலுமிகள் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. போர் பதற்றம் காரணமாக இப்பகுதியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியுடன் ஒப்பீடு

மறுபுறம், ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்த ஆண்டில் கப்பல்கள் மீது சுமார் 130 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக அம்ப்ரே நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியப் பங்கு வகிப்பதால், அங்கு நடைபெறும் சிறிய அசம்பாவிதம் கூட உலக நாடுகளின் கவனத்தை உடனடியாக ஈர்க்கிறது.

இருப்பினும், ஒட்டுமொத்தத் தாக்குதல்களின் எண்ணிக்கை மற்றும் மாலுமிகளின் உயிரிழப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஹார்முஸ் ஜலசந்தியை விடக் கருங்கடல் பகுதியே இந்த ஆண்டில் மிகவும் ஆபத்தான கடல்வழிப் பாதையாக மாறியுள்ளது. இரு முனைகளிலும் நிலவும் போர் மற்றும் பிராந்தியப் பதற்றங்கள் சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்திற்கும், அதில் பணியாற்றும் மாலுமிகளின் உயிருக்கும் தொடர் அச்சுறுத்தலாக நீடிக்கின்றன.