செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உலகைத் தன் கைக்குள் வைத்திருக்கும் என்விடியா (Nvidia) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பல தசாப்தங்களாகச் செயல்பட்டு வந்த ஜென்சன் ஹுவாங் கடந்த வாரம் திடீரெனப் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்கு ஆதரவாக என்விடியா ஊழியர்களும் உலகளாவிய டெக் ஜாம்பவான்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ‘standwithjensen.com’ என்ற இணையதளம் மூலம் தொடங்கப்பட்ட திறந்த கடிதத்தில், தற்போதைய என்விடியா ஊழியர்கள் 8,700-க்கும் மேற்பட்டோர் உட்பட உலகம் முழுவதும் 1.75 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
உரிய விசாரணை மற்றும் நியாயமான நடைமுறைக்குக் கோரிக்கை
என்விடியா வாரியத்திற்கு (Board) endereess செய்யப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், சுயாதீன விசாரணை முடிவுபெறும் வரை ஜென்சன் ஹுவாங்கை உடனடியாக மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. “முப்பத்து மூன்று ஆண்டுகளாக என்விடியாவுக்காக ஜென்சன் தனது முழு இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்துள்ளார். தொழில்துறையே நம்ப மறுத்த கருத்துக்களின் மீது அவர் பந்தயம் கட்டினார்; உலகத்தின் கணினி பயன்பாட்டு முறையையே மாற்றியமைக்கும் வரை அவர் நிறுவனத்துடன் உறுதுணையாக நின்றார்” என்று கடிதத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கையின் இலக்காக ஜென்சன் ஹுவாங் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, வாரியம் கடந்த வாரம் சுயாதிபத்திய விசாரணைக்கு உத்தரவிட்டு அவரைப் பதவியிலிருந்து விடுவித்தது. ஆனால், எந்தவித அர்த்தமுள்ள முறையான விசாரணையோ அல்லது உரிய வாய்ப்போ அளிக்காமல் அவர் அவசரமாக நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள கையெழுத்தாளர்கள், “ஜென்சன் ஹுவாங்குக்குக் கும்பல் நீதி அல்ல, உரிய நியாயமான நடைமுறையே (Due Process) வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
எலான் மஸ்க் மற்றும் உலகத் தலைவர்களின் அதிரடி ஆதரவு
ஜென்சன் ஹுவாங்குக்கு ஆதரவாகத் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளார். “ஜென்சனை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான மனு நடந்துவருகிறது, நானும் அதில் கையெழுத்திடுகிறேன்” என்று எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், என்விடியாவின் விநியோகச் சங்கிலியை ஜென்சன் மிகச்சிறப்பாக வழிநடத்தியதாகவும், பல முக்கிய வணிக ஒப்பந்தங்கள் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களை விட ஜென்சனின் வார்த்தை மீதான நம்பிக்கையில்தான் கட்டமைக்கப்பட்டன என்றும், அவரை இழப்பது நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் மஸ்க் எச்சரித்துள்ளார்.
எலான் மஸ்க்கைத் தவிர, ஷாப்பிஃபை தலைமை அதிகாரி டோபியாஸ் லுட்கே, எபிக் கேம்ஸ் சிஇஓ டிம் ஸ்வீனி, ஒய் காம்பினேட்டர் தலைவர் காரி டான், யூடியூப் இணை நிறுவனர் ஸ்டீவ் சென் மற்றும் முன்னாள் உபெர் தலைவர் ட்ராவிஸ் கலானிக் உள்ளிட்ட பல புகழ்பெற்ற தொழிலதிபா்களும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். “ஜென்சன் நம் காலத்தின் மிகச்சிறந்த கட்டமைப்பாளர்களில் ஒருவர்” என்று பாராட்டியுள்ள கலானிக், அவர் சிறிய தவறுகள் இழைத்திருந்தாலும், அது நிறுவனத்திலிருந்து அவரை நீக்கும் அளவுக்குப் பெரியது அல்ல என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நிதித்துறை அதிகாரி கொலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-வாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த விவகாரம் சிலிகான் பள்ளத்தாக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.