மொபைல் போன்கள் மற்றும் வீடியோ கேம்களில் குழந்தைகளின் நேரம் மாறிவரும் சூழலில், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் விண்மீன் திரள்களைப் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நேரடியாகக் காணும் வாய்ப்பை வழங்க மைசூருவில் இந்தியாவின் முதல் LED டோம் கோளரங்கமான ‘காஸ்மோஸ்-மைசூரு’ (COSMOS-Mysuru) உருவாக்கப்பட்டுள்ளது. மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில், சாமுண்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நவீன கோளரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), மைசூரு பல்கலைக்கழகம் மற்றும் அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
4.27 கோடி LED விளக்குகள் கொண்ட 8K டோம் தொழில்நுட்பம்
வழக்கமான கோளரங்கங்களில் மையத்தில் உள்ள புரொஜெக்டர்கள் மூலம் காட்சிகள் ஒளிபரப்பப்படும் நிலையில், மைசூரு காஸ்மோஸில் LED பேனல்களே காட்சித் திரையாக அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 15 மீட்டர் விட்டம் கொண்ட சாய்வான டோமில் 6,150 LED பேனல்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் 4.27 கோடிக்கும் அதிகமான தனித்தனி LED விளக்குகள் மூலம் 8K தரத்தில் விண்வெளிக் காட்சிகள் உருவாக்கப்படுகின்றன.
இதனால் ஆழமான விண்வெளி இருள், நட்சத்திர ஒளி மற்றும் விண்மீன் திரள்கள் தெளிவாகத் தெரிவதுடன், விண்வெளிக்குள் பயணிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. நேரடி வானியல் தரவுகள் மற்றும் நேரடி விண்வெளி உருவகப்படுத்தல்கள் மூலம் கிரக இயக்கம், நட்சத்திர அமைப்பு உள்ளிட்டவற்றை மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
அறிவியல் பாரம்பரியமும் விண்வெளிச் சாதனைகளும்
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆன்மிகமும் அறிவியலும் இந்தியாவில் இணைந்தே வளர்ந்து வந்துள்ளதாகவும், ஆரியபட்டர், வராகமிகிரர், பாஸ்கராச்சாரியார், நீலகண்ட சோமயாஜி ஆகியோரின் வானியல் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தார். மைசூரு பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (IISc) உருவாக உடையார் அரச குடும்பம் ஆற்றிய பங்கையும் அவர் குறிப்பிட்டார்.
வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர்கள் பெற்ற பதக்கங்களையும், சந்திரயான்-3, ஆதித்யா-L1, ககன்யான் திட்டங்களையும் சுட்டிக்காட்டிய பிரதமர், மீனவர்களுக்குப் புயல் எச்சரிக்கை, ரயில் இருப்பிடக் கண்காணிப்பு மற்றும் பயிர்க் காப்பீட்டு விளைச்சல் மதிப்பீடு ஆகியவற்றில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கைக்கு உதவுவதாகக் கூறினார்.
இளம் தலைமுறைக்கான அறிவியல் களம்
10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் மற்றும் ரூ.1 லட்சம் கோடி ஆராய்ச்சி நிதி ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆர்வம் ஊக்குவிக்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார். மொபைல் போன்கள் மற்றும் கேம்களுக்கு அப்பால், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் தூண்டுகோலாக இந்த 8K LED டோம் கோளரங்கம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.