“பதவியில் உள்ள பெண்களுக்கே இந்த நிலையா… கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் காட்டமான கேள்வி!”

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று முன்பு கூறிய சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள் எனத் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், இனியாவது தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதவியிலிருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே புகார் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றால், சாமானியப் பெண்களுக்கு இந்த அரசால் எப்படிப் பாதுகாப்பு வழங்க முடியும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் வினவியுள்ளார். புகார் அளிக்கும் நடைமுறையே தாமதமாகத்தான் நடைபெறுகிறது என்றால், தமிழ்நாட்டில் உள்ள மற்ற பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்திருப்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் தொடர்வதற்கே தகுதியற்றவராகி விடுவார் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாகத் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசியவர்கள் மற்றும் கூட்டணிக்கு ஆதரவாகப் பேசியவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.