ஒடிசா மாநிலத்தில் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது இறந்துபோன அக்காவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முடியாமல் தவித்த தம்பி ஒருவர், அக்காவின் எலும்புக்கூட்டையே வங்கிக்குத் தூக்கி வந்து காட்டியுள்ளார்.
ஒடிசாவைச் சேர்ந்த ஜீத்து முண்டா என்ற பழங்குடியின நபரின் அக்கா சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது வங்கி கணக்கில் ரூ.20,000 பணம் இருந்துள்ளது. இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்பத் தேவைகளுக்காக அந்தப் பணத்தை எடுக்க ஜீத்து முண்டா பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், “பணம் எடுக்க வேண்டும் என்றால், உங்கள் அக்காவை நேரில் அழைத்து வாருங்கள்” என்று வங்கி அதிகாரிகள் அவரைப் பலமுறை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
விரக்தியின் உச்சம்: அக்கா இறந்துவிட்டார் என்று அவர் பலமுறை கூறியும், அதிகாரிகள் அதைக் காதில் வாங்காமல் ஏளனம் செய்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜீத்து முண்டா, வேறு வழியின்றி புதைக்கப்பட்ட தனது அக்காவின் உடலைத் தோண்டி எடுத்து, அதிலிருந்த எலும்புக்கூட்டை ஒரு மூட்டையில் கட்டி வங்கிக்குத் தூக்கி வந்துள்ளார்.
A man in Odisha dug up his deceased sister’s grave and brought her skeleton to the bank Just to prove she had died.
He had been trying to withdraw ₹20,000 from her account, but bank officials kept insisting he bring the account holder in person. Despite repeatedly telling them… pic.twitter.com/hICEqwvPFu
— Woke Eminent (@WokePandemic) April 28, 2026
வங்கி வளாகத்தில் எலும்புக்கூட்டை அவர் காட்டியதும், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். “நேரில் கூட்டி வரச் சொன்னீர்களே.. இதோ என் அக்கா!” என்று அவர் கதறியது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது.
அதிகாரிகளின் அலட்சியம்: இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏழை மற்றும் பழங்குடியின மக்களை வங்கி அதிகாரிகள் எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். ஒரு சாமானிய மனிதன் தனது உரிமையைப் பெற இவ்வளவு தூரம் செல்ல நேரிட்டது ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பிற்கே ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ளது.