ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வரும் வேளையில், உணவகங்களின் சுகாதார சீர்கேடு தொடர்பான புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோமேட்டோ (Zomato) செயலி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பாவ் பாஜி பார்சலில் எரிந்த நிலையில், உணவில் துண்டு பீடி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பிரியம் தஹாபில்தார் (Priyam Tahabildar) என்பவர் சோமேட்டோ செயலி வாயிலாகத் தனக்கு விருப்பமான பாவ் பாஜி உணவை ஆர்டர் செய்துள்ளார். உணவு வீட்டிற்கு வந்தடைந்ததும், பார்சலைப் பிரித்துப் பார்த்த அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பாவ் பாஜியுடன் தொட்டுக் கொள்ள வழங்கப்பட்ட நறுக்கப்பட்ட வெங்காயத்தின் மேலே, அரைகுறையாக எரிந்த நிலையில் ஒரு துண்டு பீடி கிடப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இந்தச் சுகாதாரச் சீர்கேட்டைப் புகைப்படம் எடுத்த பிரியம், அதைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, சோமேட்டோ நிறுவனத்தின் கவனத்திற்குச் சென்றது. இச்சம்பவம் குறித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த சோமேட்டோ நிர்வாகம், வாடிக்கையாளரான பிரியமுக்கு இழப்பீடாக ரூ.100 மதிப்பிலான கூப்பனை வழங்கியது. உணவில் அரைகுறை பீடி கிடந்த உயிருக்கு ஆபத்தான சுகாதாரச் சீர்கேட்டுக்கு வெறும் 100 ரூபாய் கூப்பனா இழப்பீடு என்று கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் இணையத்தில் தனியாகக் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுகர்வோர் வலியுறுத்தி வருகின்றனர்.