ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ போன்ற முன்னணி வாடகை வாகனச் சேவை செயலிகளில் உள்ள ‘டிப்ஸ்’ (Tips) வழங்கும் பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும் போது, பயணிகள் விருப்பப்பட்டு வழங்கும் டிப்ஸ் வசதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயணிகள் முன்பதிவு செய்யும்போது கூடுதல் டிப்ஸ் தொகையைக் குறிப்பிட்டால் மட்டுமே ஓட்டுநர்கள் சவாரியை ஏற்றுக்கொள்கின்றனர் என்றும், டிப்ஸ் தராத அல்லது குறைவாகக் குறிப்பிடும் பயணிகளின் சவாரிகளை ஓட்டுநர்கள் புறக்கணிப்பதாகவும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக அதிக பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே விரைவாக வாகனம் கிடைக்கும் என்ற அசாதாரணமான சூழல் உருவாவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
இந்தச் சூழலைக் தீவிரமாகக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, கூடுதல் டிப்ஸ் தொகையைக் குறிப்பிட்டால் மட்டுமே விரைவாக வாகனம் கிடைக்கும் என்ற நிலைமை ஏற்படுவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், இது வாடகை வாகனச் சேவைக்கான அதிகாரப்பூர்வ விதிமுறைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. பயணிகள் அனைவர்க்கும் நியாயமான முறையில் சேவை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அனைத்துச் செயலிகளும் இந்த மாற்றத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.