சமீபகாலமாக இளைஞர்களிடையே ஒற்றைக் குழந்தையோடு நிறுத்திக் கொள்ளும் பழக்கம் அதிகரித்துவரும் நிலையில், தங்கள் சமுதாயத்தின் மக்கள் தொகையைப் பெருக்க ‘கட்ச் கடவா படிதார் சமாஜ்’ (Kutch Kadva Patidar Samaj – KKPS) என்ற அமைப்பு ஒரு புதுமையான ஊக்குவிப்புத் திட்டத்தை முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி, தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த தம்பதியினர் 3-வது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர்களுக்கு ₹50,000 பிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) பரிசாக வழங்கப்படும் என்றும், அத்தம்பதியினர் சமுதாயத்தின் சார்பில் கோலாகலமாக கௌரவிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு குஜராத் மண்டலத்தில் இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 17,000 பேர் வசசித்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைப்பின் மண்டல கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இளைஞர்கள் பலர் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்வது அல்லது குழந்தையே வேண்டாம் எனத் தள்ளிப்போடுவது போன்ற முடிவுகளை எடுப்பது சமுதாயத்தின் எதிர்காலத்திற்குப் பின்னடைவாக அமையும் என நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாகவே, பெரிய குடும்பங்களை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் பிறக்கும் குடும்பங்களுக்கு உறுதுணையாக நிற்கவும் இந்த நிதி உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ‘சூரத் பார்சி பஞ்சாயத்து’ (Surat Parsi Panchayat) அமைப்பும் தங்கள் சமூகத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ், 3-வதாகப் பிறக்கும் குழந்தைக்கு 25 வயது எட்டும் வரை மாதம்தோறும் ₹5,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள 39 பார்சி குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெற்று வருவதாக பஞ்சாயத்தின் தலைவர் டாக்டர் ஹோமி தூத்வாலா தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிறப்பு விகிதம் பல சமுதாயங்களில் சரிவைக் கண்டுவரும் வேளையில், தங்களின் பாரம்பரியத்தையும் மக்கள் தொகைப் பலத்தையும் தக்கவைத்துக்கொள்ள இதுபோன்ற சமூக அமைப்புகள் வழங்கும் நிதியுதவிகள் மற்றும் சலுகைகள் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.