“ஹிந்துத்துவம் பலவீனமடைந்தால் நாடும் பலவீனமடையும்!” – கணேச உத்சவத்தில் பாஜக தலைவர் ஆவேச உரை!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மத்தூரில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினர் சி.டி.ரவி, “இந்த நாட்டில் ஹிந்துத்துவம் பலவீனமடைந்தால், அது முழு தேசத்தையும் பலவீனப்படுத்தும்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்திற்குப் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்து அமைப்புகளின் பலத்தைக் காட்டும் வகையிலும் பாஜக மூத்த தலைவர்கள் தலைமையில் இந்த பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சி.டி.ரவி, சிறுபான்மையின சமூகத்தினரை இலக்கு வைத்து வன்முறையைத் தூண்டும் வகையிலும், அமைதியைக் கெடுக்கும் வகையிலும் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்தூர் காவல்துறையினர் இது தொடர்பாக தானாக முன்வந்து (Suo Motu) இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 196 (1)-ன் கீழ், இரு சமூகத்தினரிடையே மத ரீதியான பகைமையை வளர்த்தல் மற்றும் சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, “வழக்குகளுக்கு அஞ்சி நான் வீட்டில் முடங்கிப் போகமாட்டேன். நான் சிறுவயது முதலே ஹிந்துத்துவாவிற்காகவும் மக்களுக்காகவும் போராடி வருகிறேன். கல்வீச்சு நடத்தி வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிரான என் போராட்டமும், உண்மைக்கான குரலும் தொடரும். இதுபோன்ற வழக்குகள் மூலம் என்னை ஒருபோதும் பயமுறுத்த முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சி.டி.ரவி மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.