ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பேரணி: ஒரே நாளில் ரூ.10,000 கோடி வணிகம் பாதிப்பு என டெல்லி வர்த்தக சங்கம் குற்றச்சாட்டு!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியால் சுமார் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வர்த்தகச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (CTI) தலைவர் பிரஜேஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேரணி நடைபெற்ற ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள 20 முதல் 25 வரையிலான முதன்மையான வர்த்தகச் சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2.5 லட்சம் கடைகள் அடைப்பு

சாந்தனி சௌக், சதர் பஜார், காரி பாவுலி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மொத்த மற்றும் சில்லறை வர்த்தகச் சந்தைகளில் உள்ள சுமார் 3 லட்சம் கடைகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமான, அதாவது 2.5 லட்சம் கடைகள் பேரணி நாளில் முழுமையாக மூடப்பட்டதாக வர்த்தகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேரணிக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் கூட்டம், கடுமையான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் சரக்கு வாகனங்களின் இயக்கம் முடங்கியதால் அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வரும் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் வர முடியாமல் போனதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அரசியல் மோதல் தீவிரமடைவு

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் நடத்திய இந்தப் பேரணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பண்டிகைக் காலத்தில் டெல்லி வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தியதாக ஆளும் பாஜக விமர்சித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன் சந்தைகளில் வியாபாரம் வழக்கம் போல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது. இந்த வர்த்தக இழப்பு விவகாரம் தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.