பிரதமர் வீடியோ நீக்கம்: மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்காவிட்டால் பாதுகாப்பு ரத்து! நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தகவல் தொழில்நுட்பக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே, இச்சம்பவத்திற்கு மெட்டா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்திய ஜனநாயகத்தை நிலைகுலைக்கும் நோக்கத்துடன் மெட்டா செயல்படுகிறதோ என்ற பலத்த சந்தேகத்தையும் அவர் பகிரங்கமாக எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய வீடியோ சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஃபேஸ்புக் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்ததாக மெட்டா நிறுவனம் விளக்கமளித்து மன்னிப்பு கேட்க முன்வந்தபோதிலும், அதனை நாடாளுமன்றக் குழு ஏற்க மறுத்துவிட்டது. நாட்டின் பிரதமரின் பதிவே நீக்கப்படும் சூழல் நிலவினால், ஜூக்கர்பெர்க் தாமே முன்வந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் மெட்டா பெற்றுள்ள சட்டப்பூர்வப் பாதுகாப்பு (Safe Harbour) உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Exam Leak Controversy: "இந்திய வரலாற்றின் மோசமான பிரதமர்" – பிஎம் மோடியைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

இக்கூட்டத்தில் மெட்டா, எக்ஸ், யூடியூப் மற்றும் ஸ்னாப்சாட் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். இதனிடையே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவுகளுக்குக் குறைந்த பார்வையாளர்களையும், புதிதாகத் தொடங்கப்படும் கணக்குகளுக்கு அதிக பார்வையாளர்களையும் வழங்கும் சமூக வலைதளங்களின் ஆல்காரிதம் முறையையும் நிஷிகாந்த் துபே கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கத் தவறுவது குறித்து மத்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களின் வழிகாட்டுதல்களை நிறுவனங்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.