நீட் 2026 வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வீடியோ, இன்ஸ்டாகிராம் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 903 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் நீட் 2026 தேர்வுத் தாள்கள் கசிந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தணிக்கும் வகையில், பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவு 11:52 மணிக்கு திடீரென ஒரு செல்ஃபி வீடியோவை பதிவேற்றினார்.
எந்தவொரு அதிகாரப்பூர்வ ஸ்டுடியோ அமைப்பும் இன்றி, ஸ்மார்ட்போனில் போர்ட்ரெய்ட் செல்ஃபி மோடில் 2.55 நிமிடங்கள் நீடிக்கும் வகையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டிருந்தது. வழக்கமான ‘மித்ரோன்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, இளைஞர்களைக் கவரும் வகையில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ என்று அழைத்து ஜென் ஜி (Gen Z) பாணியில் பிரதமர் உரையாடியது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.
View this post on Instagram
இந்த ஒரே ஒரு வீடியோ மூலம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கை 24 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் (1 மில்லியன்) புதிய பயனர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அவரது மொத்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை 102 மில்லியனாக (10.2 கோடி) உயர்ந்து, இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த இன்ஸ்டா ரீல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 903 மில்லியன் (90.3 கோடி) பார்வைகளைக் கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2026 ஃபீஃபா உலகக் கோப்பை ஃபைனலின் போது பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் (IShowSpeed) பதிவிட்ட வீடியோ பெற்றிருந்த 300 மில்லியன் வியூஸ் சாதனையை மோடியின் இந்த வீடியோ தூள் தூளாக்கியுள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பாகக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும், தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வீடியோவில் உறுதியளித்த பிரதமர், மாணவர்களின் ஒரு கல்வி ஆண்டு வீணாகாமல் இருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்தார். போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள வேளையில், பிரதமரின் இந்த நள்ளிரவு டிஜிட்டல் முயற்சி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தையும் எதிரொலியையும் உருவாக்கியுள்ளது.





