“தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன்?” – நீட் தேர்வால் தொடரும் மாணவர் பலி: கொந்தளிக்கும் தமிழ்நாடு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிஜேபி உறுப்பினர் எம். போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில், இத்தீர்மானம் நிறைவேறியுள்ளது. இருப்பினும், “ஆண்டுதோறும் சட்டமன்றத்தில் வெறும் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் கட்சிகள் விளையாடுகிறதா?” என்ற காட்டமான கேள்வியும் கொந்தளிப்பும் தமிழ்நாட்டு மக்களிடமும் மாணவர் அமைப்புகளிடமும் தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளன.

கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு எதிராகத் தீர்மானங்களும் சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2021-ல் திமுக ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா (L.A. Bill No. 43 of 2021) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இறுதியில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது (Presidential Assent Withheld). இப்படி 2021-ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கே எந்தவித முடிவும் கிடைக்காமல், அது தூசி படிந்து கிடக்கும் நிலையில், இப்போது மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதால் மாணவர்களுக்கு என்ன பலன் கிடைத்துவிடப்போகிறது என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டா மாத்திட்டீங்க.. கேரவன், மேக்கப் மட்டும்தான் பாக்கி! முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்! "இனி ஸ்பீக்கர் தான் ஆக்ஷன், கட் சொல்லணும்!" அவையில் முதல்வர் விஜய்யின் செய்கைகளை நக்கல் செய்த முன்னாள் துணை முதல்வர்!

ஆட்சி பீடத்தில் திமுக இருந்தாலும் சரி, மாற்றாக வேறு எந்தக் கட்சி வந்தாலும் சரி, வெறும் அரசியல் அறிக்கைகளையும் சட்டமன்றத் தீர்மானங்களையும் மட்டுமே காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. நீட் தேர்வுத் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது போன்ற குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவை இந்தத் தேர்வு முற்றிலுமாகச் சிதைத்து விட்டது. பயிற்சிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாமல், பல மாணவர்கள் தங்களின் இன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளும் கொடூரம் தொடர்கதையாகி வருகிறது.

12 ஆண்டுகள் பள்ளியில் படித்துப் பெற்ற மதிப்பெண்களை மதிக்காமல், ஒரே ஒரு நாள் நடக்கும் நுழைவுத் தேர்வை வைத்து ஒரு மாணவனின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது அநீதியாகும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதே இதற்கு நிரந்தரத் தீர்வு என அமைச்சர் பேசினாலும், அதற்கான சட்டரீதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான அழுத்தங்களை மத்திய அரசுக்குத் தரத் தவறிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஆட்சிகள் மாறினாலும் மாணவர்களின் உயிர்களும் அவர்களின் எதிர்காலமும் பரிதாபமாகப் பலியாகிக் கொண்டிருக்கின்றன. வெறும் தீர்மானங்கள் போடுவதோடு நிறுத்திவிடாமல், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு உண்மையான விலக்கைப் பெறக் காத்திரமான அடுத்தகட்ட நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் கோபமான கேள்வியாக உள்ளது.