இந்தியாவை மிரட்டிய டிரம்ப்! ரஷ்யாவிடம் கையேந்தும் அமெரிக்கா! சாயம் வெளுத்த ஆட்டநாயகன்!

“ஊருக்குத் தான் உபதேசமா?” என்று உலக நாடுகளையெல்லாம் உரக்கக் கேட்க வைக்கும் அளவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சுயரூபமும் அசிங்கமான இரட்டை வேடமும் இன்றைக்குச் சர்வதேச அரங்கில் சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்கும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யோ, எரிவாயுவோ வாங்கக் கூடாது என்று இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை விரல் நீட்டி மிரட்டிய அதே அமெரிக்கா, இன்றைக்குத் தன் சொந்த நாட்டில் டீசல் தட்டுப்பாடு வந்ததும் எந்தக் கூச்சமுமின்றி அதே ரஷ்யாவிடம் மண்டியிட்டு நேரடியாக டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிடம் குறைந்த விலைக்குக் கச்சா எண்ணெய் வாங்கித் தன் நாட்டு மக்களுக்கு விநியோகித்த இந்தியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்றும், சுங்க வரியை அள்ளிக் குவிப்போம் என்றும் சர்வாதிகாரப் போக்கில் மிரட்டல் விடுத்தார் டிரம்ப். இந்தியப் பொருட்களுக்கு இருபத்தைந்து சதவீதம் கூடுதல் வரி விதித்ததோடு, ரஷ்யாவுடன் வர்த்தகம் வைக்கும் நாடுகளின் மீது நூறு சதவீதம் அபராதம் விதிக்கத் தம் அரசுக்கு முழு அதிகாரம் உண்டு எனத் தம்பட்டம் அடித்தார். ஆனால், மத்திய கிழக்கில் மூண்ட போரினாலும் அமெரிக்காவின் தவறான பொருளாதார முடிவுகளினாலும் அங்கு எரிபொருள் விலை விண்ணைத் தொட்டு, அந்நாட்டு லாரி உரிமையாளர்களும் விவசாயிகளும் வீதிக்கு வந்து டிரம்பை வறுத்தெடுக்கத் தொடங்கியதும், ஐயாவின் ‘வீர வசனங்கள்’ அனைத்தும் ஒரே இரவில் காற்றில் பறந்துவிட்டன!

தன்னுடைய சொந்த நாட்டு வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ளவும், உள்நாட்டுப் போராட்டத்தைத் தணிக்கவும், வரும் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ரஷ்யாவிடமிருந்து நேரடியாக டீசல் இறக்குமதி செய்யத் தடைகளைத் தளர்த்தி அவசர அரசாணையைப் பிறப்பித்துள்ளார் டிரம்ப். பிற நாடுகள் வாங்கியபோது “போருக்கு நிதி கொடுக்கிறீர்கள்” என்று அறைகூவல் விடுத்த அமெரிக்க நாக்கு, இப்போது தன் சொந்தத் தேவை என்று வந்ததும் அமைதியாக முடங்கிக் கிடப்பது எந்த மாதிரியான யோக்கியதை?

“எங்கள் நாட்டின் தேசிய நலன்களும் மக்களின் தேவைகளுமே எங்களுக்கு முதன்மை” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சர்வதேச மேடைகளில் அமெரிக்காவின் முகத்திற்கு நேராகச் சொன்ன உண்மையை, இன்றைக்குத் தன் சுயநலத்தின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்கா. பிற நாடுகளின் இறையாண்மையையும் பொருளாதாரத்தையும் மிரட்டிப் பணிய வைக்க நினைத்த வல்லரசு அமெரிக்காவின் இந்தத் சுயநலப் போக்கு, உலக நாடுகளின் மத்தியில் அதன் யோக்கியதையை முற்றிலும் தோலுரித்துக் காட்டியுள்ளது!