திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டு கல்யாணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்! கொந்தளித்த சுப.வீ, செந்தில்குமார் – சூடாகும் திராவிட களம்!

பெரியார் மற்றும் அண்ணாவின் சுயமரியாதைக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில், வைதீக முறையில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்ட விவகாரம் திராவிட இயக்க வட்டாரங்களில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. மேடைகள் தோறும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான சுயமரியாதைத் திருமணங்களைப் பிரகடனம் செய்யும் திமுகவில், அதன் தலைவர்களின் சொந்தக் குடும்ப விழாவிலேயே வைதீக முறைகள் பின்பற்றப்பட்டது உட்கட்சி அளவிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. 

இந்தச் விவகாரம் குறித்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாடிண்யன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் காரசாரமான வேதனையைப் பதிவு செய்துள்ளார். “என் பெருமதிப்பிற்குரிய, என்னிடம் பேரன்பு காட்டும் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!“ என அவர் பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

திராவிட இயக்க ஆதரவாளர்கள் மட்டுமின்றி, திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாரும் இச்சம்பவத்திற்குத் தனது பகிரங்க எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களைப் பிரகடனப்படுத்திய கொள்கைப் பிடிப்புள்ள கழகத்தில், அதனைச் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கக்கூடிய வாய்ப்பினைத் தவறவிட்டதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடில்லை” என்று கூறித் தனது தர்மசங்கடத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். 

பெரியாரியல் மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசும் 70வது வருடப்பாரம்பரிய திமுக-கட்சியின் உயர் தலைவர்கள், தங்களது வீட்டுக் சுபநிகழ்ச்சிகளில் வைதீக சடங்குகளை ஏற்றுக்கொள்வது ‘ஊருக்குத்தான் உபதேசமா?’ என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் எழச் செய்துள்ளது. எதிர்க்கட்சிகளும் தமிழ் தேசிய அமைப்புகளும் இச்சம்பவத்தைக் கையில் எடுத்து, திமுகவின் கொள்கை உறுதியை விவாதப் பொருளாக்கியுள்ளதால், திராவிட அரசியல் களம் கடும் சூடடைந்துள்ளது.