10,000 பேருக்குத் தொற்று, 4,887 பேர் பலி! காங்கோவில் கோரத்தாண்டவம் ஆடும் எபோலா வைரஸ்!

உலக நாடுகளை ஏற்கனவே பல தொற்றுநோய்கள் அச்சுறுத்தி வரும் வேளையில், ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசிலிருந்து வெளியாகியுள்ள செய்தி சர்வதேச மருத்துவ உலகையே உரைய வைத்துள்ளது. கடந்த மே மாதம் முதல் காங்கோவில் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கிய அரிதான எபோலா வைரஸ் தொற்று, தற்போது கட்டுப்பாடற்ற நிலையை எட்டியுள்ளது. இதுவரை இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-ஐக் கடந்துள்ள நிலையில், அதில் 4,887 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவு பேர் உயிரிழக்கும் அளவிற்கு இந்த நோய் கொடூரமானதாக இருப்பதற்கு, தற்போது பரவி வரும் இந்த எபோலா வைரஸின் மரபணு அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. வழக்கமான எபோலா தொற்றுகளுக்குக் தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் ஓரளவு சாத்தியமான ஒன்றாக இருக்கும் சூழலில், காங்கோவில் பரவும் இந்த குறிப்பிட்ட ‘அரிதான’ (Rare Strain) எபோலா வைரஸுக்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியோ அல்லது உறுதியான மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

மருத்துவக் கட்டமைப்புப் பற்றாக்குறை மற்றும் சர்வதேச உதவி வழங்குவதில் உள்ள தாமதம் காரணமாகக் காங்கோ நாட்டின் பல கிராமங்களில் நோய் பரவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்துவதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பதிலும் கடுமையான சவால்கள் நிலவுகின்றன. உலகச் சுகாதார அமைப்பும் (WHO) சர்வதேச மருத்துவக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளபோதிலும், முறையான தடுப்பூசிகள் இல்லாததால் இந்த இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவது பெரும் போராட்டமாக மாறியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை தாண்டி இந்த அபாயகரமான வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவாமல் தடுக்க சர்வதேச எல்லைகளில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.