மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை இந்தியாவில் மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎம் ஈ-டிரைவ் (PM E-DRIVE) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இருசக்கர மின்சார வாகனங்களுக்கான மானிய சலுகைகளை மார்ச் 31, 2028 வரை நீட்டித்து மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலைக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, இருசக்கர மின்சார வாகனங்களுக்கான மானிய ஒதுக்கீடு ரூ.1,772 கோடியிலிருந்து ரூ.2,767 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 45.7 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர மின்சார வாகனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த PM E-DRIVE திட்டத்தின் நிதி ஒதுக்கீடும் ரூ.11,900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு கிலோவாட் ஹவர் (kWh) பேட்டரி திறனுக்கு ரூ.2,500 வீதம், ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்படும். இருப்பினும், இந்த மானியத்தைப் பெற அந்த இருசக்கர வாகனத்தின் தொழிற்சாலை விலை (Ex-factory price) ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாகனத்தின் தொழிற்சாலை விலையில் அதிகபட்சம் 15 சதவீதம் வரை மட்டுமே இந்த மானியம் பொருந்தும்.
தொடக்கத்தில் இந்தத் திட்டம் குறுகிய காலத்திற்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த நீட்டிப்பை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் ஏதர் (Ather), ஓலா (Ola Electric), டிவிஎஸ் (TVS iQube), மற்றும் பஜாஜ் (Bajaj Chetak) போன்ற முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளையும் உற்பத்தியையும் மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த அதிரடி முடிவால், இனி புதிதாக மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு விலையில் நல்ல сஅலுகை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் விற்பனையை மேலும் துரிதப்படுத்த இத்திட்டம் மிகப்பெரிய தூணாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.