சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டிச் சமூகத்தில் குற்றங்களைக் தடுக்க வேண்டிய உயர்பதவியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளே, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்குக் குடைபிடிக்கும் கொடூர உண்மை இன்றைக்குத் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது! ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் தொடர்புடைய சுமார் 147 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துப் பரிமாற்றம் மற்றும் 40 கோடி ரூபாய் லஞ்சப் புகார் தொடர்பாகத் தமிழ்நாடு காவல் துறையின் 4 முக்கிய உயர் ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி இருப்பது ஒட்டுமொத்தக் காவல் துறையின் முகத்திலும் கரியைப் பூசியுள்ளது.
முன்னாள் காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர்கள் ராதிகா மற்றும் கண்ணன், துணை ஆணையர் வனிதா ஆகிய உயர் அதிகாரிகளுக்குச் சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பித் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. நேர்மையும் கண்ணியமும் மிக்க அதிகாரிகளாகக் காட்டிக்கொண்டு உலா வந்த இந்த உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் சட்ட ஒழுங்கு இயங்கியதா என்ற கேள்வியைக் கேட்கும்போது சாமானிய குடிமகனின் ரத்தம் கொதிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்கள், ஒரு குற்றவாளியைக் காப்பாற்றக் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழும் புகார்களைக் கேட்கும்போது, வேலியே பயிரை மேய்ந்த கதையாக அல்லவா உள்ளது?
ஜெம் வீரமணியின் 147 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட சொத்துக்கள் யாருக்கு விற்பனை செய்யப்பட்டன, எதற்காக அவசர அவசரமாக அந்த பரிமாற்றங்கள் நடந்தன என்ற உண்மைகள் உடனடியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கைமாறியதாகக் கூறப்படும் 40 கோடி ரூபாய் லஞ்சப் பணம் காவல் துறையில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை யார் யாருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பதும் துல்லியமாக விசாரிக்கப்பட வேண்டும். அதிகாரத் மமதையில் சட்டத்தைச் சட்டைப் பைக்குள் போட்டுப் பூட்டிவைக்க நினைத்த அத்தனை அதிகாரிகளின் பெயர்களும் தயவுதாட்சணியமின்றிப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
குற்றவாளிகளுக்குத் துணைபோகும் உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயலும் பின்னணி அரசியல் சக்திகளையும் சேர்த்துத் தோலுரிக்கத் தவறினால், இந்த நாட்டில் சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் சொற்ப நம்பிக்கையும் முற்றிலும் அழிந்துவிடும். வெறும் விசாரணையோடு இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல், குற்றஞ்சாட்டப்பட்ட அத்தனை உயர் அதிகாரிகளின் பதவிகளையும் பறித்து, அவர்களைச் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளுவதே நியாயமான நீதியாக இருக்க முடியும்!