ஆயுதப்படைகளில் அதிகாரியாகப் பணிபுரிந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு இந்திய ராணுவம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக ‘லெப்டினன்ட்’ (Lieutenant) அந்தஸ்தில் சேருவதற்கான டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் (TES-56) படிப்புக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
2027 ஜனவரி மாதம் முதல் தொடங்கும் இந்த சிறப்புப் பயிற்சிப் படிப்பிற்குத் தகுதியான, அதாவது திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த ராணுவப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) ஆகிய பாடப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதனுடன், சமீபத்தில் நடைபெற்ற ஜேஇஇ மெயின் 2026 (JEE Main) நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு தகுதியான மதிப்பெண்களைப் பெற்றிருப்பது கட்டாயமாகும். மேலும், விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட ராணுவ உடற்தகுதி தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தின் இந்த தொழில்நுட்ப பிரிவில் மொத்தம் 90 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கோர்ஸில் சேருவதற்கு விண்ணப்பதாரர்கள் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியின்படி, 16.5 வயது முதல் 19.5 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள் முழுமையான தொழில்நுட்ப மற்றும் ராணுவப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு ராணுவ விதிகளின்படி உதவித்தொகையும் (Stipend) வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஜேஇஇ மெயின் 2026 மதிப்பெண்களின் அடிப்படையில் முதற்கட்டமாகத் தகுதியானவர்கள் பட்டியலிடப்படுவார்கள் (Shortlist). அவர்களுக்குச் சேவைகள் தேர்வு வாரியம் (SSB) மூலம் ஐந்து நாட்கள் கொண்ட நேர்காணல் தேர்வு நடத்தப்படும்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு இறுதித் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். பயிற்சி காலத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்குப் பொறியியல் (Engineering Degree) பட்டத்துடன் ராணுவத்தில் நிரந்தர லெப்டினன்ட் அதிகாரி பணி வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூன் 12 ஆம் தேதிக்குள் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.





