இஸ்ரேலில் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானுக்கு எதிராக மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) சூசகமாக எச்சரித்துள்ளார்.
“ஈரானுக்கு எதிரான நடவடிக்கை முடியவில்லை”
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவு அடையவில்லை. ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். இந்தக் அச்சுறுத்தல்களைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
மேலும், லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், “ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானுடன் கைகோர்த்துக்கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால், அவர்கள் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; தங்களின் கூடுதல் நிலப்பகுதிகளையும் இழக்க நேரிடும்” எனத் தெரிவித்தார்.
உள்நாட்டு அரசியலும், தேசிய பாதுகாப்பும்
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டிடம் ஒப்படைத்துள்ள நிலையில், காட்ஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாட்டிற்குள் நிலவும் அரசியல் சூழல் குறித்துப் பேசிய காட்ஸ், “நாட்டிற்குள் நமக்குள்ளே பல கருத்து வேறுபாடுகள் மற்றும் கடுமையான விவாதங்கள் இருக்கலாம்; ஆனால் நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக நிற்க வேண்டும்” என வலியுறுத்தினார். இதன் மூலம், புதிய அரசு அமைந்தாலும் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பாதுகாப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்பது தெளிவாகியுள்ளது.