“மூக்கை நுழைக்க வேண்டாம்!” சிபிஎஸ்இ 3 மொழி கொள்கை; ஆளுநர் அர்லேகருக்கு தாகூர் சாட்டை!

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE), 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையைக் (Three-Language Policy) கட்டாயமாக்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதுடன், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற இந்த மூன்றாவது மொழிக்கான பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுத் தேர்வில் (Internal Assessment) மாணவர்கள் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்புதிய கல்வி முறை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தச் சூழலில், பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) திட்டத்தின் ஒரு பகுதியான இந்த மூன்று மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் ஆளுநர் மூக்கை நுழைக்க வேண்டாம்; எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும், டெல்லி அல்ல!” என்று மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை சிறிதும் மதிக்காமல், மத்திய பாஜக அரசின் கொள்கைகளைத் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க ஆளுநர் முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் அவர் சாடியுள்ளார். இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டின் கல்விச் சுதந்திரத்தில் ஆளுநரின் இத்தகைய தலையீடு மாநில உரிமைகளைத் பறிக்கும் செயல் எனத் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் விலை மீண்டும் உயர்வு?" டீஎஸ்எம்சி நிறுவனத்தின் அதிரடி முடிவால் டெக் உலகம் அதிர்ச்சி!