தற்போது போர் தேவையில்லை! – ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் மிரண்டுபோன ஆட்சி: மார்க்கோ ரூபியோ பேட்டி!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஜி7 (G7) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக, தற்போதைய சூழலில் ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத் தடைகளின் தாக்கம்

பாரிஸ் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்கோ ரூபியோ, ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் முன்னெடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார். “ஈரான் ஆட்சி மீது செலுத்தப்படும் பொருளாதார அழுத்தம் மிகவும் தீவிரமானது மற்றும் அது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார். மேலும், சர்வதேச சந்தையில் ஈரான் தனது எரிபொருளை விற்பனை செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்காவின் இலக்கு ராணுவ மோதல்கள் இல்லாமல் பொருளாதார வழிமுறைகள் மூலமாக அடையப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

அமைதிக்கான டிப்ளமட்டிக் முயற்சிகள் மற்றும் சவால்கள்

முன்னதாக, வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிராந்திய நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக ராணுவத் தாக்குதல்களைத் தள்ளிவைக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஈரான் தரப்பு வலியுறுத்தி வருகிறது. எனினும், ஈரான் வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை என்றும், அதேசமயம் வரம்புகளை மீறினால் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பு எச்சரித்துள்ளது.