காவிரி படுகையில் மேகதாது சமநிலை அணைக் கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் அரசியல் மற்றும் சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேகதாது அணை திட்டப்பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும், காவிரி ஆற்றுப் படுகை மாநிலங்களின் முறையான ஒப்புதல் பெறாமல் எந்தவித திட்ட அறிக்கைகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது அரசின் அழுத்தமான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
“யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை”
செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், “தமிழக முதல்வருக்கு நாட்டின் சட்டங்கள் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய 177 டிஎம்சி தண்ணீரை பாக்கி இன்றி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், கர்நாடகா தனது சொந்த மாநிலத்தில் அணை கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது” என்று வாதிட்டார்.
மேலும், 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த மேகதாது அண திட்டத்தால் தமிழகத்திற்குப் பற்றாக்குறை காலங்களில் கூடுதல் நன்மைகள் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக 5,400 ஏக்கர் வன நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பணிகள் முடிந்தவுடன் மத்திய அரசிடம் இறுதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்துக் கட்சிகள் ஆதரவும், தமிழகத்திற்கு அழைப்பும்
இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் நின்று செயல்படுவதாகச் சுட்டிக்காட்டிய சிவக்குமார், ஆளுங்கட்சியான காங்கிரஸுடன் எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்களும் கர்நாடகாவின் உரிமைக்கு ஆதரவு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சண்டையிடுவதற்கோ அல்லது மோதிக்கொள்வதற்கோ இப்போது இடமில்லை; அந்த காலம் முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. சட்டத்தை மதித்து இணைந்து செயல்படுவோம். தமிழக முதலமைச்சர் ஒரு நிபுணர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வாய்ப்பை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம்” எனத் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.