கடந்த திமுக ஆட்சியின் போது கோவையின் காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் தொடங்கப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பிரமாண்ட நூலகம், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நூலகம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகப் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் அடிப்படையில், நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் (DVAC) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு வாங்கிய நூல்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பிற நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதிலும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று தனது புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த நவீன நூலகத் திட்டத்தில் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளதும் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதால், அடுத்தகட்டமாக யார் யாரிடம் விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.