Navagraha Daan Tips: எந்த கிரக தோஷத்திற்கு எந்த பழத்தை தானம் தர வேண்டும்? ஆன்மீக பெரியோர்கள் சொன்ன பரிகார ரகசியங்கள்!

மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கும், தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நவகிரகங்களின் சுழற்சியே முக்கிய காரணமாக அமைகிறது. ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருக்கும்போதோ அல்லது தீய பலன்களை தரும் இடங்களான மறைவு வீடுகளில் இருக்கும்போதோ மனிதர்களுக்குப் பல்வேறு தடைகளும் கஷ்டங்களும் ஏற்படுகின்றன. இந்த நவகிரக தோஷங்களை எளிய முறையில் நிவர்த்தி செய்ய, சாஸ்திரங்களில் பழங்களை தானமாக வழங்கும் பரிகார உத்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி, நவகிரகங்களின் தோஷத்தை போக்க எந்தெந்த கிரகத்திற்கு என்னென்ன பழங்களை தானம் செய்ய வேண்டும் என்பதை பின்வரும் வேத சுலோகம் மிகத்தெளிவாக விளக்குகிறது:

“ஸூர்யாய மாதுலுங்கஞ்ச சந்த்ராய கதளீபலம் |
குஜாய தாடிமீ பலம் புதாய ஆம்ரபலம் ததா ||
குரவே பநஸஞ்சைவ சுக்ராய கர்ஜூரகம ததா |
சநயே ஜம்பூ பலஞ்சைவ ராகுவே நாரிகேளகம் ||
கேதவே மாதுலுங்கஞ்ச பலந்யேதாநி கல்பயேத் ||”

இந்த சாஸ்திர விதியின்படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நிறம், சுவை மற்றும் குணம் இருப்பதால், அதற்கு இணையான பழங்களை தானமாக வழங்கும் போது அந்த கிரகத்தின் தீய தாக்கம் குறைகிறது. சூரிய பகவானின் தோஷம் நீங்கி நல்ல ஆரோக்கியமும், அரசு வேலை வாய்ப்புகளும் கிடைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மாதுளை, செவ்கோலி ஆப்பிள், மாம்பழம் போன்ற சிகப்பு மற்றும் குங்கும நிறப் பழங்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்க வேண்டும். மன அமைதி மற்றும் தாயின் ஆரோக்கியம் மேம்பட திங்கட்கிழமைகளில் இளநீர், பேரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களை தானம் செய்யலாம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

செவ்வாய் தோஷத்தின் வீரியத்தைக் குறைத்து, கடன் தொல்லைைகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளில் நல்ல சிகப்பு நிற மாதுளம்பழம் அல்லது பிளம்ஸ் பழங்களை தானமாக வழங்குவது சிறந்த பலனைத் தரும். புதன் பகவானின் அருளைப் பெற்று கல்வி, புத்தி கூர்மை மற்றும் வியாபாரத்தில் லாபம் அடைய புதன்கிழமைகளில் கொய்யாப்பழம், பச்சை ஆப்பிள் அல்லது ஐந்து வகையான பழங்களை ஒரு சேர தானம் செய்வது விசேஷமானது. குரு பகவானின் ஆசியால் திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கூடிவர வியாழக்கிழமைகளில் மஞ்சள் வாழைப்பழங்கள் மற்றும் பப்பாளியை தானம் தர வேண்டும்.

ஆடம்பர வசதிகள் பெருகவும், கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கவும் வெள்ளிக்கிழமைகளில் சீதாப்பழம் மற்றும் வெள்ளை திராட்சை போன்ற இனிப்பும் புளிப்பும் கலந்த பழங்களை தானமாக வழங்கலாம். சனி பகவானின் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சனிக்கிழமைகளில் நாவல்பழம், கருப்பு திராட்சை போன்ற அடர் நிறப் பழங்களை தானம் தர வேண்டும். ராகு மற்றும் கேதுவின் விஷத்தன்மைகளை முறிக்க சனிக்கிழமைகளில் தேங்காய் மற்றும் அன்னாசி, பலாப்பழம் போன்ற கடினமான தோல் கொண்ட புளிப்பு சுவையுடைய பழங்களை தானம் செய்வது காரிய சித்தியை உண்டாக்கும்.