சீன உளவுத்துறை பெண் அதிகாரியுடன் தொடர்பா? உலகத் தொழில்நுட்பத் துறையை அதிர வைக்கும் தகவல்! அமெரிக்கா – சீனா இடையே புதிய பூகம்பம்!

செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகளின் உலகளாவிய முன்னணி நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹூவாங் (Jensen Huang) மீது சீனா தரப்பிலிருந்து உளவு ஊடுருவல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச தொழில்நுட்ப அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தயாரித்த ரகசிய மெமோ ஒன்றின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அலிஸ் ஹூவாங் விவகாரம்

அமெரிக்க உளவுத்துறையின் தகவல்படி, சீனாவைச் சேர்ந்த அலிஸ் ஹூவாங் (Alice Huang) என்ற பெண், அந்நாட்டின் முதன்மை வெளியுறவு உளவு அமைப்பான ‘மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டேட் செக்யூரிட்டி’ (Ministry of State Security) அமைப்பால் உளவு பார்க்க நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மெகாஸ்பீடு’ (Megaspeed) என்ற டேட்டா சென்டர் நிறுவனத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய அவர், என்விடியா சிஇஓ ஜென்சன் ஹூவாங்குடன் நெருக்கமான மற்றும் காதலில் ஈர்க்கப்பட்ட உறவைப் பேணியதாக அமெரிக்க உளவுத்துறை தயார் செய்த மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான ஏற்றுமதித் தடைகளை மீறி, தடை செய்யப்பட்ட மேம்பட்ட என்விடியா ஏஐ சிப்கள் மெகாஸ்பீடு நிறுவனம் மூலமாகச் சீனாவுக்குக் கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமெரிக்க வர்த்தக மற்றும் நீதித்துறைகள் விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்த உளவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

என்விடியா நிறுவனத்தின் மறுப்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் விசாரணை

இந்தக் குற்றச்சாட்டுகளை என்விடியா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜென்சன் ஹூவாங் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் அதிகாரிகளைச் சந்திப்பது வழக்கம் என்றும், வாடிக்கையாளர்களுக்கு சாதாரண வர்த்தகத் தகவல்கள் மட்டுமே வழங்கப்படுமே தவிர, தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு இரகசியத் தகவல்களும் பகிரப்படுவதில்லை என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் அந்நாட்டுத் தொழில்நுட்பங்களைக் குறிவைத்து வெளிநாட்டு சக்திகள் ஊடுருவுகிறதா என்பது குறித்து விசாரிக்கச் பிரதிநிதிகள் சபையின் மூன்று முக்கியக் கமிட்டிகள் ஜென்சன் ஹூவாங்கை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அழைப்பு விடுத்துள்ளன. உலகப் புகழ்பெற்ற ஏஐ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் மீது எழுந்துள்ள இந்த உளவுப் புகார் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.